மனக்கோளாறுடையவர்களின் மறந்து போன பழைய அநுபவங்களை வெளிக்கொணர்வது ‘தடையிலாத் தொடர் முறையின்’ முக்கிய சிறப்பாகும். இந்த முறையை பிராய்டு உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் ஜோசப் பிராயர். மனவசிய நிலையில் இருக்கும்போது ஒரு ஹிஸ்டிரியா நோயாளி தனது பழைய அநுபவங்களைக் கூறியதால் அந்த நோய் குணமாகி வந்ததை பிராயர்தான் முதலில் கவனித்து பிராய்டுக்குக் கூறினார். பிறகு இரு வருமாக இந்த முறையைக் கையாளத் தொடங்கினார்கள். இதில் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் பிராயர் இம்முறையைத் தொடர்ந்து பின்பற்றவில்லை. இம்முறையால் நோயாளிக்கும் மருத்துவருக்குமிடையே சில சிக்கல்கள் ஏற்படுவதைக் கண்ட பிராயர் இதைக் கைவிட்டுவிட்டார். பிராய்டுதான் இதைத் தொடர்ந்து பின்பற்றியதோடு மனவசிய நிலை இல்லாமலேயே பழைய அநுபவங்களையும் அதிர்ச்சிகளையும் நனவிலி மனத்திலிருந்து வெளிக் கொண்டுவருவதற்கு முடியும் என்று கண்டார். அவர் வகுத்த முறைக்குத் ‘தடையிலாத் தொடர் முறை’ என்று பெயரென்பதும் நமக்கு முன்பே தெரியும்.
இவ்வாறு நனவிலி மனத்திற்குள் நுழைந்து ஆராயும் போது பிராய்டுக்கு சில அடிப்படையான உண்மைகள் புலனாயின. வாழ்க்கையிலே ஏற்படும் அநுபவங்களும், அதிர்ச்சிகளும் அழிந்து போவதில்லை என்று அவர் கண்டார். அவை மனத்திலே எங்கோ அழுந்திக்கிடக்கின்றன. முக்கியமாகக் குழந்தைப் பருவத்திலே ஏற்படுகின்றவை