பக்கம்:அடி மனம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அடிமனம்

மறைவதே இல்லை. குழந்தை பிறக்கின்ற போது அதன் மனம் மலாாத நிலையில் இருக்கிறது. குழந்தையின் மனம் அதற்குக் கிடைக்கும்படியான அநுபவங்களைக் கொண்டு மலர்ச்சியடைய வேண்டும். ஆகவே அந்த இளமனத்திற்கு ஆரம்ப நிலையில் கிடைக்கும் அநுபவங்கள் மிக முக்கியமானவை. அந்த அநுபவங்களே அக் குழந்தையின் பிற்கால வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. குழந்தைக்குப் பாரம்பரியமாகப் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் தன்மைகளும் திறமைகளும்கூட வாழ்க்கையிலே பலிதமாவதற்கு இளமைச் சூழ்நிலையும் அநுபவங்களும் உதவி செய்ய வேண்டும், அதிலும் முக்கியமாக ஐந்து ஆண்டுகளுக்குட்பட்ட குழந்தைப் பருவத்து அநுபவங்கள் உதவ வேண்டும். இதைப்பற்றி குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்; குழந்தை உள்ளம் என்ற இரண்டு நூல்களிலே விரிவாக விளக்கியிருக்கிறேனாகையால் இங்கு மீண்டும் அதை விரிவு படுத்தாமல் குறிப்பாக மட்டும் கூறுகிறேன்.

மனக் கோளாறுடையவர்களை ஆராய ஆராய பிராய்டுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக உறுதிப்பட்டன. அவற்றைப்பற்றி அவர் மிக அழுத்தமாகப் பேசலானார். அவற்றில் ஒன்று குழந்தைப் பருவ அநுபவங்களைப்பற்றியது. இந்த அநுபவங்கள் அவருக்கு மிக முக்கியமானவையாகத் தோன்றின. அதனால் அவர் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அமைப்பு முழுவதும் அவனுடைய குழந்தைப் பருவமான முதல் ஐந்தாண்டுகளிலேயே அநேகமாக உருவாகிவிடுகின்றது என்று தெளிவாகக் கூறுகிறார். உளவியல் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற ஆட்லர் (Adler) கெஸல் (Gesell) முதலியோரும் இக்கருத்தையே வலியுறுத்தினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/33&oldid=1004423" இருந்து மீள்விக்கப்பட்டது