மனத்திலே இத் என்பதுதான் மிகப் பெரிய பகுதியாக இருக்கிறதென்று பார்த்தோம். அதனுடைய ஆழத்திலே போகப் போக ஒரே இருட்டாக இருக்கிறது. அதாவது அங்குள்ளவை ஒன்றும் நமக்குத் தெரிவதில்லை. ஒரே அந்தகாரத்தில் அவை அழுந்திக் கிடக்கின்றன. இந்த அந்தகாரத்தில்தான் அடக்கப்பட்ட இழிந்த இச்சைகளும் பெரிய அதிர்ச்சியனுபவங்களும் மறைந்துள்ளன என்று தெரிந்துகொண்டோம். அதீத அகத்தால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு அடக்கப்பட்ட இச்சைகள் இங்கே பதுங்கி நனவுக்குத் தெரியாமலிருக்கின்றன.
இவை மட்டுந்தான் இத்தில் இருப்பதாகத் தீர்மானம் செய்யக் கூடாது. அங்கே மனிதனுக்கு இயல்பாகவே அமைந்திருக்கின்ற சில உந்தல்களும் இருக்கின்றன. அவை அநுபவத்தால் கற்றுத் தெரிந்து கொண்டவை அல்ல. பிறவிலேயே அமைந்துள்ள வேகங்கள் அவை. அவற்றைப் பிறவிச் சக்திகள் என்று கூறலாம். அவை மனிதனை உந்திப் பலவகையான செயல்களிலே ஈடுபடச் செய்வதற்கு ஊக்கம் கொடுப்பதால் அவற்றை இயல் பூக்கங்கள் என்று சொல்லுகிறார்கள். கலவியூக்கம், உணவு தேடூக்கம் என்று இப்படிப் பல இயல் பூக்கங்கள் இருக்கின்றன. இவை விலங்குகளிடத்திலும் காணப்படுகின்றன. விலங்குகள் பொதுவாக இவற்றால் உந்தப்பட்டுச் செயல் புரிகின்றன. பறவை கூடுகட்டுகிறது. தூக்கணாங் குருவி அழகான கூடொன்றை நாரைக்