பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறவாது, மனையற வாழ்வு மேற்கொண்டு மாண்புற்றனர்; ஈட்டிய இருநிதியனைத்தும் தமக்கே உரியவாம் என எண்ணி விடாது, வருவார் அனைவர்க்கும் வழங்கி வான்புகழ் ஈட்டினர். உலகவாழ்வை இளமையிலேயே இழந்துவிடாது, கடைபோகளவும் கண்டு களித்தனர்; இடையே, பிணியுற்று வீழ்ந்ததும் இல்லை; இவ்வாறு நாடும் மக்களும் நல்லவர் ஆனது, அக்காலை, அரியணை அமர்ந்திருந்த, நின் முன்னோர்தம் ஆட்சி நலத்தால்; கொடிய சினமும், கழிபெரும் காமமும், அளவிற்கு மீறிய கண்ணோட்டமும், அஞ்சத் தகாதனபாலும் அஞ்சுவதும், பொய்யும், புரைதீர் அன்பே ஆயினும், வரம்பிறந்துபோதலும் கையிகந்த தண்டமும் போல்வன நல்லரசழிந்து வல்லரசாக்க, நற்றுணை புரிவன என அறிந்து, அவற்றை அறவே கடிந்தும் அவற்றிற்கு மாறான அறப்பண்புகள் அனைத்தையும் ஆட்கொண்டும், ஆட்சிபுரிந்து மாட்சி பெற்றனர்; அத்தகு பெரியோர், தோன்றிய பெரிய குடிவந்தவன் நீ’’ என அவன் குடிப்பெருமை கூறுவார் போல், அரசாள் முறையினை, அவன் அறிந்து நெஞ்சகத்தே ஏற்றிப் புகுத்திவிட்டார்.

"சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச்சொல், அன்பு மிகஉடைமை,
தெறல்கடுமையொடு பிறவும், இவ்வுலகத்து
அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்
தீதுசேண் இகந்து, நன்று மிகப் புரிந்து,
கடலும் கானமும் பலபயம் உதவப்,
பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,
மையில் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய

ஊழி உய்த்த உரவோர் உம்பல்!”
-பதிற்றுப்பத்து:22 : 1-11

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/16&oldid=1318710" இலிருந்து மீள்விக்கப்பட்டது