பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

151



ஸ்ம்ஸார பந்தோ ஜீவோ ஹி
தஸ்மாந் முக்த: ஸதாசிவ: (குமாரசங்கிதை)

"பாசபந்த முடையவன் சீவன்; அதினின்று விடுபட்டவன் சதாசிவன்.” என்னும் இது இங்கே அறியவுரியது. சீவன் சிவன் ஆவது தெரியநின்றது.

மாசு நீங்கிய அளவே ஆன்மா தேசுமிகப் பெறுகிறது. உரிய பரமும் உயிரும் உணர வந்தன.

ஈசனிடமிருந்தே சீவன் பிரிந்து வந்துள்ளான். அந்தப் பிரிவினால் அளவிடலரிய துன்பங்களை அடைய நேர்ந்தான்: நேர்ந்த நீசத்துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் பாசம் என்றே தெளிந்தான்: அப்பற்றை முற்றும் ஒழித்தான்; பழைய பரமானந்த நிலையை அடைந்தான். முத்தி, வீடு என்பன எல்லாம் இந்த விடுதலை நிலையையே குறித்து நிற்கின்றன.

பாசவேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமாறு அடியனேற்கு அருளிப்
பூசனை யுகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே!
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி
செல்வமே! சிவபெரு மானே!
ஈசனே! உன்னேச் சிக்கெனப் பிடித்தேன்.
எங்கெழுந் தருளுவது இனியே? (திருவாசகம்).

பாசம் தீர்ந்து ஈசனைச் சேர்ந்து மாணிக்கவாசகர் இன்பம் தோய்ந்துள்ள நிலையை இதனால் அறிந்து கொள்கிறோம். பரம புனிதனான இறைவன் அருள்புரிய வேண்டின் மனிதன் உள்ளம் பரிசுத்தமாக வேண்டும்.ஆன போதே அதிசய இன்பமாகிறது.