பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

அ ணி ய று ப து

 இவை வளமா எய்தியபொழுது தம்மைப் பெரியராக எண்ணிப் பெரும்பாலும் மனிதர் களிக்க நேர்வர். செருக்கு தருக்கு இறுமாப்பு மமதை அகங்காரம் என்பன எல்லாம் மடமைக் களிப்புகள்: இவற்றை அடைய நேர்ந்தவர் சிறுமை அடைவர். தமக்கு வாய்த்த சிறப்புகளைக் கருதிச் செருக்கு உறாதவரே சிறந்த மேலோராய் உயர்ந்து திகழ்வர்.

பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். (குறள், 979)

சிறந்த பெரியோர் யார்? இழிந்த சிறியவர் எவர்? என்பதை இதில் தெளிவாய்த் தெரிந்து கொள்கிறோம். இயல்பின் அளவே உயர்வு.

தக்க மேன்மைக்கு அடையாளம் கீழ்மையான செருக்கு யாதும் உள்ளத்தே கொள்ளாமையேயாம். மதிகேடான மடமையிலிருந்தே மமதைகள் விளைகின்றன. அவற்றால் அவலத் துயர்களாகின்றன.

இறப்பு= இறுதியுறுவது; முடிவு: சாவு.

பிறந்தவர் எவரும் இறந்தே போவர். உடம்பை விட்டு உயிர் பிரிய நேரும்போது கொடிய துயரங்கள் நேர்கின்றன.

பரணம்ஆகிய பெண்டிரும் சுற்றமும்
பண்டு தங்கையில் தந்த
இரணம் ஆனவை கொண்டிட இவரைவிட்டு
இயம்பிடா திவண் ஏகும்
மரண வேதனை யாவரால் அறியலாம்?
மயங்கி ஐம்புலன் அந்தக்
கரணம் யாவையும் கலங்கிட வருந்துயர்
கடவுளே அறி கிற்பார். (பெருந்திரட்டு)