பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

37


7.உற்ற முகத்துக் கொளிர்கண் அணிஉறவாப்
பெற்ற துணைக்கன்பு பேரணியாம்-கற்ற
கலைக்கணி சொல்வன்மை காரிகையார் தங்கள்
நிலைக்கணி நாணம் நினை.

(எ)
இ-ள்.


கண் முகத்துக்கு அழகு; அன்பு, துணைவர்க்கு அழகு; சொல் வன்மை, கலைக்கு அழகு; நாணம்,பெண்களுக்கு நல்ல அழகு என்க.

ஒளிர்கண் = கூர்மையான பார்வை யுடையது.


உடலுருவில் முதன்மையாய் நிற்பது முகம். அதில் எழில் உயர்ந்து விளங்குவது ஒளி மிகுந்த கண். அந்த விழி நலமா யிருப்பின் எல்லாம் இன்பமாம்; இல்லையானால் யாவும் இழிவாம்.


கண்ணில் யாக்கையும் திங்களில் கங்குலும் கண்போல்
அண்ணல் மந்திரி இல் அரசாட்சியும் அருளில்
திண்ணில் நெஞ்சமும் புலவரில் அவையும் ஒண் தீம்பால்
வண்ண வாய்இள மக்களில் வாழ்வும்ஒப் பாமால்.

(சீகாளத்திப்புராணம்)


கண் இல்லாத உடல், சந்திரன் இல்லாத இரவு.மந்திரி இல்லாத அரசாட்சி, அருள் இல்லாத நெஞ்சம், புலவர் இல்லாத சபை, புதல்வர் இல்லாத வாழ்வு புலையாம் என இது குறித்துளது. கண்ணை முதலில் வைத்தது ஈண்டு எண்ணி உணரவுரியது.


துணை என்றது உடன் பிறந்த துணைவரையும். உரிமையாயுற்ற மனைவியையும், உறவாய்த் தொடர்ந்த நண்பரையும் ஒருங்கே குறித்து நின்றது.