பக்கம்:அணியும் மணியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பாராட்டுரையால் நிறைவு படுத்தி, முழுக்கட்சியாகக் காட்டுகின்றார் எனலாம்.

முதற்கண் கோவலன் கண்ணகியைப் பாராட்டும் புகழுரையில் அவள் அழகையும் மற்றுமுள்ள நலன்களையும் மட்டும் சிறப்பிக்கின்றான். அப்பொழுது அவள் பண்பை அறிவதற்கு வாய்ப்பில்லை. பின்னர் அமைந்த பாராட்டுரையில் அவள் பண்பையே சிறப்பித்துக் கூறுகின்றான். இவ்வாறு முன்னும் பின்னும், வாழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும், இறுவேறு காட்சிகளில் கண்ணகியின் நலனும் பண்பும் பாராட்டப்படுகின்றன.

கயமலர்க் கண்ணியாகி கண்ணகியும் அவள் காதற் கொழுநனான கோவலனும் நெடுநிலை மாடத்தில் மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசையிருந்துழித் தீராக்காதலால் அவள் திருமுகம் நோக்கி அவள் அழகையும் நலனையும் வியந்து பாராட்டுகிறான்.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே

காசறு விரையே கரும்பே தேனே

என்று, அவள் நலன்களை மட்டும் பாராட்டிக் கூறுகின்றான். பொன்னைப் போன்ற நிறத்தையும், முத்துப் போன்ற மென்மையையும், குற்றமற்ற நறுமணத்தையும், கரும்பு போன்ற இனிமையையும், தேன் போன்றுமிழற்றும் இனிய மொழியையும் அவன் பராட்டுரையில் அமைக்கின்றான். வெறும் புலன்களின் இன்பங்களைச் சுற்றியே அவன் புகழுரை அமைந்துள்ளது. இந்தப் புகழுரையால் கண்ணகியின் கற்பும், பொற்பும் சிறப்பிக்கப் பெறவில்லை. எனவே இந்தப் பாராட்டோடு விட்டுவிட்டால் கண்ணகியின் உயர்ந்த பண்புகளை அறிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. வாழ்விலும் தாழ்விலும் அவளை நன்கு அறிந்த பிறகே கோவலனால் அவள் பண்பைப்