பக்கம்:அணியும் மணியும்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


45 காவியத்திற்குக் கதை உயிரென்றால், கவிதை அதை இயக்கும் உடல் எனலாம். அவ்வுடலை அழகுபடுத்தும் அணி கவிஞன் எடுத்தாளும் உவமை உருவகம் போன்ற அணிகள் எனக் கூறலாம். அவ்வணியை ஒளிரச்செய்யும் மணிகள் புலவனின் கற்பனைத்திறன் எனலாம். மகளிர் அணியும் அணி மணிகளால் சிறப்புறுவதைப் போலக் கவிஞர் ஆளும் அணிகள் அவர்தம் கற்பனைத் திறத்தால் பொலிவு பெறுகின்றன. சொல்லுவதை வெறும் அணியழகுபட மட்டும் சொல்லுவதில் கவிஞனுக்குச் சிறப்பு ஏற்படுவதில்லை. அதனோடு, புலவன் தன் கற்பனையையமைத்துப் புதுமையாகவும் சுவையாகவும் கூறுவதில்தான் பாடல்கள் அழகும் சுவையும் பெறுகின்றன. அத்தகைய பண்பை நளவெண்பாவில் பல இடங்களில் நாம் காணலாம். நாட்டின் நலத்தைப் பாட்டில் காட்டும்பொழுது அவர்தம் கற்பனையில் ஒறு புதுமை காணப்படுகிறது. கம்பர் அயோத்தி நகரத்தில் வறுமையின்மையால் வண்மை இல்லை என்றும், செறுநர் இன்மையால் திண்மை இல்லை என்றும் சொல்கிறார். அவ்வாறு சொல்வதில் ஒரு புதுமை காணப்படுகிறது. அதைப் போலவே புகழேந்தியும் நாட்டுச் சிறப்டைக் கூறும் பொழுது ஒரு புதுமையைப் புகுத்தி அழகுபடக் கூறுகின்றார். அந்நாட்டில் எந்த வகையான கொடுமையும் ஏற்படுவது இல்லையென்றும், அதனால் மக்கள் எவ்வகையாலும் சோர்வு கொள்வதில்லை என்றும், அவர்கள் வாய்திறந்து அரற்றக் காரணமில்லையென்றும், நீதியில் வளைவு இல்லையென்றும் சொல்ல வந்தவர். அவ்வாறு கூறாமல் வேறு வகையாகக் கூறுவது அவர் கற்பனைத் திறனைக் காட்டுகிறது. "வளைவு என்பது வில்லிலேதான் உண்டு, சோர்வு என்பது கூந்தலிலேதான் உண்டு; அரற்றுதல் என்பது சிலம்பிலேதான் உண்டு' என்று கூறி, அவர் கற்பனையாற்றலைக் காட்டி அவற்றை அழகுபடக் கூறுவதைக் காண்கின்றோம்.