பக்கம்:அணியும் மணியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

வேண்டும் என்று நன்மையோடு கூடிய உண்மையை மற்றொரு பாடல் அறிவுறுத்துகின்றது. வயது முதிர்ந்து வாழ்வின் நன்மையையும் தீமையையும் நன்கு கண்டவர்களும் இந்தச் சிறு உண்மையை மறந்து பிறருக்குச் சில சமயங்களில் தீமை செய்வது வியப்பாக இருக்கிறது என்று அப்பாடல் உணர்த்துகிறது.

“பல் சான்றீரே! பல் சான்றீரே! கயல்மீனின் முள் போன்ற நரை முதிர்ந்து திரைத்த கதுப்பினையும், பயனில்லாத முதுமையையும் உடைய பல் சான்றீரே! இயமன் பாசத்தாற் கட்டிக்கொண்டு போங்காலத்து நீர் இரங்குவீர்; அதனால் நல்வினையைச் செய்ய மாட்டீராயினும் தீவினையைச் செய்தலை நீங்குமின்; அதுதான் யாவரும் உவப்பது; அன்றியும் தல்ல நெறிக்கண் செலுத்துவதும் ஆகும்” என்று உணர்த்துகிறார் அதன் ஆசிரியர்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பிற் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே - 195

என்ற புறம்பாடல் சிறந்த அறத்தை மிக அழகாக வாழ்க்கையில் கொள்ளவேண்டிய பேருண்மையாக அறிவுறுத்துகிறது.

மற்றொரு பாடல் உலகத்தில் சான்றோர்கள் இருப்பதால்தான் நல்ல நெறிகள் நிலைக்கின்றன என்றும், உலக வியல்பு ஓரளவு குன்றாமல் மக்கள் மக்களாக வாழமுடிகிறது என்றும் உணர்த்துகிறது. உலகில் தமக்கென வாழாமல்