பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அணுவின் ஆக்கம்


இதுகாறும் நாம் அறிந்த பயன்படத்தக்க யுரேனியக் கனிப்பொருள்களிலிருந்து கிடைக்கும் ஆற்றல் இவ்வுலகிலுள்ள எல்லா நிலக்கரிப் படிவுகளினால் கிடைக்கும் ஆற்றலை விட 25லிருந்து 50 மடங்குவரை அதிகம் இருக்கிறது என்று கணக்கிட்டிருக்கின்றனர். எனவே, நிலக்கரிக்குப் பதிலாக யுரேனியத்தை ஓர் உலக எரியையாகக் கருதுவது நடைமுறைக்கு உகந்தது என்று சொல்லலாம்.

தோரியம் கனிப் பொருள்கள்கூட அணு எரியைகளின் ஒரு முக்கிய மூலமாகக்கூடும். ஆயினும், அவற்றைப் பயன்படுத்தும் முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த உலோகம் யுரேனியத்தைவிட அருமையானது;[1] ஆகவே, இதன் கனிப்பொருள்கள் அதிகமாகப் பரந்து காணப்பெறவில்லை. ஆயினும், இதுவரையிலும் கண்டறியப்பெற்ற தோரியப்படிவுகள் அதிகமாகவே உள்ளன என்று சொல்லலாம். 'நீலத் திரைக்கடல் ஒரத்திலே-நின்று, நித்தம் தவம்புரியும் குமரி எல்லை'யைச் சார்ந்த கடற்கரையில் மோனசைட் [2] என்ற ஒருவகை மணலில் தோரியம் அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். இம்மணல் உலகிலேயே அதிகமான தோரியத்தைக்கொண்ட மூலம் என்று சொல்லப்படுகிறது. இதன் அருமை தெரியாது அண்மைவரை பெறற்கரிய இந்த நிதியைச் சுரண்ட அந்நியரை அனுமதித்து வந்தோம். இப்பொழுது இம்மணலின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப் பெற்றுள்ளது. ஆண்டொன்றுக்கு 1500 டன் மணலைப் பிரித்தெடுக்கக்கூடிய இயந்திரம் ஒன்று நிறுவப் பெற்றுள்ளது. தென் அமெரிக்காவைச் சார்ந்த பிரேஸில் என்ற நாட்டிலும் மோனசைட் என்ற தோரியப் படிவுகள் சிறிய அளவுகளில் காணப்பெறுகின்றன. இவ்வுலகில் எங்கெங்கு யுரேனிய, தோரியமூலங்கள் கண்டறியப் பெற்றுள்ளன என்பதைப் படத்தில் காண்க. (படம்-14)

கணிப்பொருள்களினின்றும் பிரித்தல் : ஒவ்வொரு டன் யுரேனியக் கணிப்பொருள்களில் 2 லிருந்து 10 இராத்தல்


  1. அருமையானது - rare.
  2. monazite.