பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

157


ஒடியும், காலி இடங்களில் வந்ததும் இன்னும் அதிகமாக வேகம் பெற்றும், மேன்மேலும் வேகத்தைப் பெற்றுக் கொண்டேயிருக்கின்றன.

அரைச் சுற்றுக்கு ஒருமுறை அவை ஓடும் வட்டமும் விளிம்பை நோக்கி விரிகின்றன. ஆகவே, மையத்தில் ஒடத் தொடங்கிய மின்துணுக்குகள் இறுதியில் கிட்டத் தட்ட விளிம்போரத்தில் ஒதுங்கி ஓடி வருகின்றன. இவ்வாறு பல முறை தூண்டப்பெற்றால் அவை கடுமையான வேகத்துடன் ஓடி விளிம்பிற்கு அருகேயுள்ள ஒரு துளைவழியாகப் புறத்தே பாய்ந்து அணுவினைத் தாக்கிச் சிதைக்கும். கூட்டமாக வெளிவரும் அணு-ரவைகள் பிற அணுக்களைத் தகர்க்க வல்ல மிகவும் ஆற்றல்வாய்ந்த கற்றைகளாகப் பயன்படுகின்றன.

இன்று அமைக்கப்பெறும் சுழலினிகள் மிக முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன. பல ஆயிரக் கணக்கான டன் எடையுள்ள சுழலினி இயந்திரங்கள் செய்யப்பெற்று வருகின்றன. அமெரிக்காவில் பெர்க்லி29 என்னுமிடத்தில் 3000 டன் நிறையுள்ள காந்தத்தைக் கொண்ட சுழலினி ஒன்று இப்பொழுது அமைக்கப் பெற்றுள்ளது. அதன் விட்டம் 15 அடி. இதிலிருந்து வெளிவரும் மின் துணுக்குகள் கிட்டத்தட்ட ஒளியணுக்களின் வேகத்தை-வினாடிக்கு 1,86,000 மைல்-பெறுகின்றன. இன்று ஜப்பான், இரஷ்யா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுழலினிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் இன்று 40 சுழலினிகளுக்கு மேல் இயங்கிவருகின்றன என்று சொல்லப்பெறுகின்றது.


29பெர்க்லி-Berkeley.