பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணலாரும்
அறிவியல் ஆய்வும்

இறைவனின் இறுதித் தூதராய், அவனிக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நம் பெருமானார் முஹம்மது நபி (சல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய பெருவாழ்வை மொழிந்து சென்ற அருங் கருத்துகளை பல்வேறு கோணங்களில் அறிவுலகம் ஆய்ந்து அரிய உண்மைகளை நாளும் வெளிப்படுத்தி வருகிறது.

அண்ணலார் வாழ்ந்து காட்டிய, வகுத்தளித்த ஆன்மீகச் சிந்தனைகளையும் பொருளியல், அரசியல் நெறிகளையும் பற்றி எத்தனையெத்தனையோ ஆய்வுகள் வெளி வந்துள்ளன. அவையெல்லாம் அறிவுலகின் புதிய சிந்தனைகட்கு, செயற்பாடுகட்கு ஊற்றுக் கண்ணாகவும் உந்து சக்தியாகவும் அமைந்து வருவது கண்கூடு.

இன்றையச் சூழலில், உலகின் அனைத்துத் துறை வளர்ச்சிகளுக்கும் அடிப்படையாய் அமைத்திருப்பது அறிவியல் எனக் கூறின் அது மிகையாகாது. உலகின் ஒட்டு மொத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் உயிர் நாடியாகக் கருதப்படும் அறிவியல் உணர்வும் சிந்தனையும் இறையருட் கொடையாய் வந்த அண்ணலாரால் ஊட்டி வளர்க்கப்பட்டதென்ற உண்மை சிலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால், அதுவே முழு உண்மை என்பதை பெருமானாரின் சொல், செயல் வழி ஆராய்வோருக்கு இனிது புலனாகும். இவ்வுண்மையை உணர சிறிது பின்னோக்கிப் பார்ப்பது அவசியம்.