பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 58



இந்தியர்களின் கோரிக்கைகளிலுள்ள நியாயம் உணரப்பட்டு, பர்மிய அரசு ஆணை மூலம் பர்மாவாழ் தமிழர்களின் நலனை தகுந்த முறையில் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்தியர்களுக்கும், பர்மியர்களுக்கும் உறவு முறைகள், சுமுகமாக இருந்து வந்தன.

பர்மிய பொருளாதாரத்தில் நகரத்தார்கள் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தார்கள்.

லண்டன் சென்ற குழுவினரின் பணி, இருதரப்பினருக்கும், பெரும் பயன் விளைவிப்பதாக இருந்தது.

பர்மா - இந்தியர்களுக்குள்ள பரவலான பொறுப்புகளை உணர்ந்த அதே வேளையில் - அண்ணாமலை செட்டியார் பர்மாவிற்கு இந்தியா ஆற்ற வேண்டிய கடமைகளையும் உணர்ந்திருந்தனர்.

இந்தியர்களின் குடியேற்றத்தைப் பற்றிய வினாக்கள் அடிக்கடி, விவாதத்திற்குரியனவாயிருந்தன.

1937-ல் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்; மேலவையிலும், வெளியிலும், இந்தியர்களுக்கு நியாயமான பங்குரிமை கிடைப்பதற்குச் சோர்வில்லாமல் போராடினார்.

பர்மா இந்தியர்களைப் பற்றிய அயர்வற்ற பணிகளில், பர்மா பிரச்சினையில் ஆர்வம் கொண்ட அனைத்து இந்தியர்களின் அசைக்க முடியாத துணை கிடைத்தது.