பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண லீலா

13


களைத் தயாரித்து அரண்மனையிலே நிரப்பினார்கள். அவர்கள் தங்களாலானதை எல்லாம் செய்து பார்த்தார்கள், அதிசயத்தின் மனதிலே காதல் முளைக்க வேண்டும் என்று முடியவேயில்லை. அவள் ஒரே பிடிவாதமாக, எனக்கேற்ற கணவனை நீங்களே தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி விட்டாள். அவளுக்குச் சாசனத்தின் தகவல் தெரியும் என்பது, அந்த மூன்று முட்டாள்களுக்குத் தெரியாது. அரசகுமாரி! நேற்று நமது நந்தவனத்திலே இன்னிசை பாடிய இளையவனிடம் தங்களுக்கு இஷ்டமா? என்று கேட்பார் மந்திரியார். “ஆமாம், இசைவாணனிடம் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு” என்று கூறுவாள் அறிவுள்ள அதிசயம். மணம் செய்து கொள்ள......” என்று தந்திரமாக வலைவீசும் பேச்சை ஆரம்பிப்பார் மந்திரியார். “தங்கள் உத்தரவு அதுவானால் தடையில்லை” தயக்கமின்றிக் கூறுவாள் அதிசயம்.

“எங்கள் உயிரை வாங்க வேண்டாம். எங்களுக்கு தெரியுமா இதெல்லாம்? சரியான வேலை தருகிறீர்கள், ஆள் தேடும் வேலை” என்று கோபிப்பார்கள் மூவரும் சில சமயம்.

“தேடித் திரிவானேன், ஓலை அனுப்பிப் பல தேசத்து மன்னர்களையும் வரவழைத்து விடுங்கள்” என்று யோசனை கூறுவாள் அதிசயம். அகப்பட்டுக்கொண்டாள் அரசகுமாரி என்று நினைத்து மந்திரியார், “ஆஹா அது செய்கிறோம். சகல மன்னரையும் தருவிக்கிறோம். அவர்களிலே யாருக்கு... என்று சுயம்வர இலட்சணத்தை மனதிலே புகுத்துவார். உங்கள் தந்திரம் என்னிடம் பலிக்காது என்று கூறுவது போல ஒரு தடவை புன் சிரிப்புடன் இருந்து விட்டு, உடனே, “யாருக்குத் தாங்கள் மாலையிடச் சொல்கிறீர்களோ, அவரை நான் மணம் செய்து கொள்வேன்” என்று கூறுவாள் அதிசயம். “அதற்கு ஒரு மந்தையை ஓட்டிக்கொண்டு வருவானேன்” என்று கோபிப்பார் சேனாபதி ஒரே இடத்திலே இருந்தபடி சிரமமில்லாமல்