பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அண்ணாவின் ஆறு கதைகள்




“சீ! நான் என்ன உன்னை ஏதாவது செய்து விடுவேன் - என்று பயமா? அதெல்லாம் இல்லை. இங்கே வாயேன்.”

பேச்சை வளர்த்திக்கொண்டே இருந்தால், தூங்குபவர் விழித்துக்கொண்டு தன்னைத் திட்டுவார்கள் என்று அந்த ஏழைப் பெண் பயந்தாள். மெள்ள எழுந்து, தோட்டத்துப் பக்கம் சென்றாள். வேலன் பின் தொடர தோட்டத்தருகே வந்ததும்,

“இதோ, பாருங்கோ ! யாராவது விழித்துக் கொண்டால், என் கதி என்ன ஆவது? கன்னி கழியாத பெண்ணுக்கு இந்த நேரத்திலே ஆண் பிள்ளையுடன், அதிலும் காலையிலே கலியாணானவனுடன் என்னடி பேச்சு, என்று என்னை ஏசுவார்கள். போய்ப் பேசாமல் படுத்துத் தூங்குங்கள். இவ்வளவு ஆசை என் மீது இருக்கிறவர்தானா, அந்தத் தேய்ந்துபோன சிறுக்கியைத் தேடிக் கட்டிக்கிட்டீர். ஏன், மணை ஏற அவள், மஞ்சத்துக்கு நானா? நாங்கள் ஏழைகளானாலும், மானத்துக்கு அஞ்சினவங்கோ, மகாராஜா! நாம் குழந்தைகளா இருந்ததிலிருந்து சேர்ந்து விளையாடினோம். போதும் போங்கள் நானல்ல, மசிபவள்.”

“வள்ளி! நான் கெட்ட நினைப்புடன் வந்தேனென்றா எண்ணுகிறாய்?”

“தொட்டுக்கிட்டுப் பேசாதிங்க, தூரமா நில்லுங்க. நான் கூவி வீட்டை கலக்கிடுவேன்.”

“வள்ளி! நான் வந்தது, அதற்கெல்லாம் அல்ல. உண்மையாக, சத்தியமாக, அப்படிப்பட்டவனா ?”

“ஒரு பெண்ணுக்காக, ஆண் எத்தனை பொய் சத்தியமும் வைப்பான் என்று பாகவதர் இராத்திரி சொன்னாரே, நான் கேட்டேன்.”

மீண்டுமோர் காலடிச் சத்தம் கேட்டது. வள்ளி கைகளைப் பிசைந்துகொண்டு, “ஐயோ! என் மானம் போகுமே!