பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அண்ணாவின் ஆறு கதைகள்


இல்லாமே போனா, வயலும் காயும் ; என் வயிறும் காயும் ; என்று வருத்தத்துடன் கூறுவான். வெறும் வழிப் போக்கனுக்கு என்ன வாட்டம்? போகிற போக்கிலே பயிரை மிதித்துத் துவைத்துக் கொண்டுதான் போவான். அன்னத்தைக் கொண்டு அஷ்ட ஐஸ்வரியம் அடையவேண்டும் என்பதல்ல, தாயம்மாளின் எண்ணம். வாழ்வதற்கே அந்த ஒரு வழிதான் இருந்தது. அன்னத்தை தான் உயிரோடிருக்கும் போதே நல்லவனிடம் பிடித்துக் கொடுத்து விட்டால் தான், அவள் நிம்மதியடைய முடியும். இல்லையானால் அன்னமும் ஆலாகப் பறக்க வேண்டியது தானே! தாயம்மாள் பட்ட கஷ்டங்களெல்லாம் நினைவுக்கு வந்தன. எத்தனை சண்டைகள், எவ்வளவு பட்டினி, தூற்றல், அப்பப்பா! பகையாளிக்குக் கூட நேரிடக் கூடாது இந்த கஷ்டம் என்று எண்ணினாள் தாயம்மாள்.

பெண் உருவாக இருந்தால் விழுங்கிவிடுவது போலத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள். கொஞ்சும்போதோ, நீயே பூலோக ரம்பை! உன்னையன்றி வேறொருவளைத்தொடேன் என்று சத்தியம் செய்வார்கள். ஆனால் கலியாணம் என்றால் மட்டும், அதற்கு வேறு இடம், அந்தஸ்து, குலம், ஜாதிக்கட்டு, வீட்டுக் கட்டுப்பாடு என்று ஏதேதோ பேசுவார்கள். 'கலியாணம் செய்துகொண்டால் என்ன கண்ணே ! நமக்குள் இருக்கும் பிரியம் போய்விடுமா? என்று பேசுவார்கள். விம்மினால், கண் துடைப்பார்கள். அந்த நேரத்திலே நெஞ்சு நெகிழும். பிறகு அவர் வேறு உலகம், இவள் வேறு உலகம். பிளவு, விரிந்து கொண்டே போகும். கலியாணத்துக்கு ஒரு கன்னி, காதலுக்கு வேறோர் கன்னி என்ற முறை ஏற்படும். இந்தக் கோளாறு தாயம்மாளை விபசாரியாக்கிற்று. அன்னம் அதன் விளைவு அன்னத்தையாவது நல்ல கதிக்குக் கொண்டு வரவேண்டுமென்று தாயம்மாள் எண்ணினதிலே தப்பென்ன, பாபம் !

மிராசுதார் வீட்டு மகன் மலையப்பன், தாயம்மாள் வீட்டுக்குத் தாராளமாக வரப்போக இருந்தான். தாயம்மாளின் தகப்பன் பூரித்தான். ஊரார் தாயம்மாளின் தகப்-