பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அண்ணாவின் ஆறு கதைகள்


யாயி” நான் என்ன பாபம் செய்தேன்? என்னை இக்கதிக்கு ஆளாக்கினாயே ! அவர் காட்டிய அன்பு என்னை இணங்க வைத்து விட்டது. அவர் எவ்வளவு பிரியமாக, சத்தியம் செய்து என்னைத் தாலி கட்டுவதாக அவர் அப்பாமீது ஆணையிட்டுச் சொன்னார்! நான் நம்பினேன்! என்னை நட்டாற்றிலே விட்டுப் போய்விட்டாரே! இந்த ஏழையை இந்தப்பாடு படுத்தலாமா? நான் உனக்கு என்ன குறை செய்தேன் ? பூஜையிலோ, விரதத்திலோ, பக்தியிலோ நான் தவறவில்லையே ! என் தலைமீது இந்தக் கல் விழலாமா” என்று காளியைப் பிரார்த்தித்து கண்ணீர் வடித்தாள். காளிக்கு என்ன இதுதானா வேலை? கண்ணீர் வடிக்கிற பெண்களுக்குக் கருணை காட்டுவது என்ற வேலையிலே காளி ஈடுபட்டால், ஓய்வே கிடைக்காதே ! காளியின் அருள் கிடைக்கவுமில்லை, கரு சிதையவுமில்லை. “காளி ! ஊரிலே வருகிற காலரா, பிளேக், கடும் ஜுரம் ஏதாவது எனக்கு வரக்கூடாதா! என்னை உன் பாதத்திலே சேர்த்துக் கொள்ளேன்” என்று பிரார்த்தித்தாள் பேதை. காளியின் பாதத்திலே இருக்கும் பிணக்குவியல், அமோகமாயிற்றே இவளுக்கேது இடம். வயிற்றிலே, அன்னம், தாயம்மாளைத் தன் காலால் மெல்ல உதைத்துக் கொண்டிருந்தாள். வயிற்றிலே குழந்தை தவழுது முகத்திலே புன்னகை தரும் மற்றவர்களுக்கு, தாயம்மாளுக்கோ திகிலைத் தானே தரும். மிராசுதார், கொஞ்சம் பணம் கொடுத்து ‘இதுகளை’ ஊரைவிட்டுத் துரத்திவிடவேண்டும் என்று முதலிலே நினைத்தார். பிறகு யோசித்தார், பணம் தருவானேன் ; மிரட்டினால். ஓடாதா என்று அதைப் போலவே செய்தார். வேற்றூரில் சர்க்கார் ஆஸ்பத்திரியில் தான், கலியாணமாகாத. தாயம்மாளுக்கு, அழகான பெண் குழந்தை அன்னம் பிறந்தாள். பிறகு பட்ட கஷ்டங்கள் இவ்வளவு அவ்வளவல்ல! எத்தனையோ அவதிகள், எவனெவனோ நாயகர்கள். ஒவ்வொருவனிடம் பழகிய போது ஒவ்வோர் நிலை, நினைப்பு. சுபாவம் அவள் விபசாரியானாள் “அந்தப் படுபாவி என்னை இக்கதிக்கு விட்டு விட்டான். அவன் தலையிலே இடிவிழ அவன் குடும்பம் அழிய. காளி