உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

கள். இவர்களுடைய வருங்காலக் கொள்கை என்ன என எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மக்களைத் திருப்தி செய்துவிட முடியாது. முக்கியமாக அவர் தம்முடைய உரையில் அறிவித்திருக்க வேண்டிய கொள்கை விளக்கத்தையும் நிதி அமைச்சருக்கே ஒதுக்கி விட்டிருப்பதைக்கண்டு உறுப்பினர்கள் குறிப்பிட்டது போல் ஏற்கனவே ஏகப்பட்ட பாரத்தைத் தூக்கிக்கொண்டிருக்கும் நிதி அமைச்சர் அவர்களுக்கே மேலும் அதிகமாகத் தொல்லை தருவதாக இருக்கிறதே என்று நான் பரிதாபப்படுகிறேன். நம்முடைய நிதி அமைச்சர், அவர்கள் நிதிக்கும் அமைச்சர், நீதிக்கும் அமைச்சர். கல்விக்கும் அமைச்சர் இந்த மூன்று பெரும் துறைகளையும் தாங்குவதற்குரிய ஆற்றல் படைத்தவர்தாம் அவர் என்பதை சபைக்கு நெடுந்தொலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காலம்முதலே நன்கு உணர்ந்திருக்கிறேன். என்றாலும் பொதுவாக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சராக இருப்பவர்கள், செலவாகின்ற இலாக்காக்கள் எதையும் தம்மிடத்தில் வைத்துக்கொள்ளாமலிருப்பதுதான் ஜனநாயக பண்பாட்டுக்கு உகந்தது என்று பல்வேறு நாடுகளில் வலியுறுத்தப்படுவதை நான் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதன் மூலமாக அவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இதர இலாக்காக்களுக்கு அள்ளி அள்ளி வாரி வழங்கி விடுவார் என்ற ஐயப்பாட்டினாலே நான் இதைச் சொல்லவில்லை! ஆனால் எங்கே தாம் வாரிவாரி வழங்கிக்கொண்டு விட்டதாக பிறர் தம்மீது குற்றம் காட்டிவிடுவார்களோ என்ற அச்சத்தினாலே தம் பொறுப்பில் வரும் இலாகாக்களைப் பட்டினி போட்டுவிடுவாரோ என்ற ஐயப்பாட்டினாலேயே நான் இதைக் குறிப்பிடுகிறேன். அதற்காக கனம் உறுப்பினர் ஸ்ரீ சின்னத்துரை "அமைச்சர் அவையை விரிவுபடுத்த வேண்டும்" எனச் சொன்னபடி சொன்னால் அதை அமைச்சர் அவையில் உள்ளவர்கள் ரசித்தார்களோ என்னவோ கனம் அங்கத்தினர்கள் ரசித்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

நிதி அமைச்சர் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிற நிதி, நீதி, கல்வி ஆகிய மூன்று துறைகளும் நம்முடைய நாட்டில் பொது வாழ்வு பற்றிய முக்கியமான துறைகள். அவை மூன்றும் வெவ்வேறாக வகுக்கப்பட்டு தனித்தனியாக நல்ல முறையில் செயல்பட வேண்டியவைகள். அப்படிப்பட்ட முக்கியமான துறைகள் மூன்றும் ஒருவரிடமே ஒதுக்கப்பட்டு நிதி அமைச்சரி-