உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

டத்தில் தந்திருப்பது, உண்மையிலேயே அவருடைய ஆற்றலுக்கு அது ஒரு சான்று என்றாலும் ஆட்சியாளர்கள் அவரிடத்திலே வைத்திருக்கின்ற அபாரமான நம்பிக்கைக்கு ஒரு சான்று என்றாலும், அவரைப்போன்ற ஒரு இளைஞரிடத்தில் அம்மூன்று இலாக்காக்களும் இருப்பது இளைஞர்கள் உலகத்திற்கே பெருமை அளிப்பதாக இருக்கிறது என்றாலும், உண்மையிலேயே இப்படியின்றி இவை வேறுவேறாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு அமைச்சர்கள் பொறுப்பில் வருமானால், இவர் நிதி அமைச்சர் என்ற முறையில் தம்முடைய நியாயமான தீர்ப்புகளை வகுத்துக்கொண்டு எல்லாத்துறைகளுக்கும் தாராளமாக. ஏராளமான நிதி வழங்கி அதன்மூலம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக நல்ல பலன் நாட்டுக்குக் கிட்டும்படியாக பணியாற்ற முடியும் என்று எதிர்பார்த்தே நான் அந்தக்குறையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கவர்னர் பெருமகனார் கொள்கை விளக்கத்தை வரவு செலவுத் திட்டத்தின் போது வைத்துக்கொள்ளலாம் என்று ஒதுக்கிவிட்டாலும்கூட "வரவு செலவு திட்டம்" கொள்கையின் அடிப்படையில் அமைகின்ற புள்ளி விவரக் கணக்கே தவிர அதில் கொள்கை விளக்கத்திற்கு அதிகமாக இடம் இருக்கப்போவதில்லை. இருக்கவும் தேவை இல்லை. "படத்திற்குச் சட்டமே தவிர சட்டத்திற்கு படம் அல்ல" என்பது போல் கொள்கையிலே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுவதனால், கொள்கைகளையே முதலில் பேசிய எதிர்க் கட்சிக்காரர்கள் உண்மையிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையினர் என்றாலும் அவர்கள் சொல்கின்ற சிலபல நேர்மையான கருத்துக்களையும் அரசியல் பெருந்தன்மையோடு அளும் கட்சியினர் ஏற்றுக்கொண்டு வரவு செலவு திட்டத்தை தாயாரித்துக் கொடுப்பதாக இருந்தால் தான் அந்த வரவு செலவுத் திட்டம் பூர்த்தியானதாக இருக்கும். மக்களுடைய கருத்துக்கள் எல்லாம் அதிலே கலந்து பிரதிபலிக்கும். ஆனால் இன்றைக்குக் கொள்கைகளைப்பற்றி பேசி முடிவுசெய்யாமலேயே ஒரு திங்கள் கழித்து வரப்போகின்ற வரவு செலவு திட்டத்திலே கொள்கைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் நம்முடைய கொள்கைகள் ஒரு பக்கம் இழுத்தால் வரவு செலவு புள்ளி விவரங்கள் நம்மை வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போய்விடும். அப்போது கொள்கைகளை எல்லாம் அலசி ஆராய்வதற்கு நேரமும் இருக்காது. அப்படியே அலசி ஆராய்வதாக இருந்தாலும்