உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

ரண வழி வேண்டும் என்று இன்று காலையிலிருந்து பல அங்கத்தினர் கூறுகின்றனர். இவைகளையெல்லாம் நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்கும்போது நீங்கள் கோபப்படுவானேன்? வருத்தப்படுவானேன்? நாங்கள் இவ்விடத்திற்கு உங்களுக்கு லாலி பாடுவதற்காக வரவில்லை குற்றங் குறைகளை எடுத்துக் கூறவே வந்திருக்கிறோம். அதுதான் ஜனநாயகத்தின் பொறுப்பு. நாங்கள் இங்கிதம் தெரியாமல் நடந்துகொள்ளவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் போகவில்லை. நீர்ப்பாசன வசதி கிடைக்கவில்லை, குடி தண்ணீர் வசதி கிடைக்கவில்லை என்பதனையெல்லாம் பல அங்கத்தினர்கள் எடுத்துக் காட்டினார்கள். இவ்வளவுக்கும் காரணமென்ன? காங்கிரஸ் அங்கத்தினர்களே, உங்களுக்கு இந்த மன்றத்தின் மூலம் ஒன்று கூறுகிறேன். எதிர்க் கட்சியிலுள்ளவர்களுக்காவது குறைகள் இருக்கும். அவை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் குறைகளை கூறவேண்டியதுதான். ஆனால் ஆளும் கட்சிக்காரர்களாகிய உங்களுக்கு பல கமிட்டிகள் இருக்கின்றன. அதன் மூலம் அரசாங்கத்திற்குத் தெரிவித்து உங்களது குறைகளைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம். அவ்விதமிருந்தும் நீங்கள் இங்கு எடுத்துச் சொல்லுவதற்குக் காரணம் என்ன? நீங்கள் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டீர்களா? அல்லது அவர்களது செவிகளில் நீங்கள் கூறுவது ஏறவில்லையா? அல்லது எங்கள் எதிரில் சொன்னாலாவது அமைச்சர்கள் வெட்கப்பட்டுக் கொண்டாகிலும் குறைகளைத் தீர்ப்பார்கள் என்பதற்காக பேசுகிறார்களா? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. ஆகவே இம்மாதிரியான குறைகளைப் பற்றி விரிவாக பேசவில்லையென்றால் எதிர்க்கட்சிக்காரர்களாகிய எங்களுக்கு பட்ஜெட்டின் அடிப்படை கொள்கைகளைப்பற்றி இன்னும் அதிகம் பேசுவதற்கு இடம் கிடைத்திருக்கும், இங்கு கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் எல்லாம் நிர்வாக இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்பதுதான். ஜனநாயகம் வளருவதற்கு நிர்வாகக்கொள்கை அடிப்படையில் கவனிக்கவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களின் அனுமதியின் பேரில் இந்த மன்றத்தில் கவர்னர் பெருமான் அவர்கள் ஆற்றிய பகுதியை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்:—

"The Finance Minister in his Budget Speech will deal with the policies of the new Ministry."

என்று வாக்களித்திருப்பதனால் நிதி அமைச்சர் அவர்களது உரையில் கொள்கை அளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் என்று எண்ணி

4