உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

நிதி அமைச்சர் அவர்களைப் பலர் பாராட்டினார்கள். பாராட்டுதலினால் அவருக்கு அஜீரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற முறையில் பல அங்கத்தினர்கள் பாராட்டினார்கள். ஆனால் என்னுடைய பாராட்டுதல் இனிப்போடு கொஞ்சம் காரம் கலந்ததாக இருக்குமாதலால் அவருக்கு ஏற்பட்ட அஜீரணம் மாறி ஜீரணம் ஆகிவிடும். தான் யார் என்று நாங்கள் அவரை அறிந்துகொள்ள முடியாமல் நடந்து கொண்டதற்கு நிதி அமைச்சரை வெகுவாகப் பாராட்டுகிறேன். தான் யார் என்று காட்டாமல் இருப்பதற்குக்காரணம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் தான் யார் என்று காட்டிக் கொள்வது நல்லது அல்ல என்று கருதினார்களோ, அல்லது தான் யார் என்று கண்டு பிடிக்கக்கூடாது என்று கருதினார்களோ, தான் யார் என்று காட்டிக்கொள்ளவில்லை. நான் சொல்லுவது பொருளாதாரப் பாஷையிலே சொல்லுகிறேன். அதிக வரி போட்டுப் பொருளாதாரத்தை பெருக்குவதை ஆதரிக்கின்றாரா? கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக்கொண்டு நாட்டு நிர்வாகத்தை ஓட்டிச் செல்லுகின்ற பரம்பரை பொருளாதார நிபுணராக இருக்கின்றாரா? துண்டு விழும் பட்ஜெட்டினால் நாட்டிற்கு நன்மை உண்டு என்று கருதுகின்ற பொருளாதார நிபுணராக இருக்கின்றாரா? உபரி பட்ஜெட் நாட்டிற்கு நல்லது என்று கருதுகின்ற பொருளாதார நிபுணராக இருக்கின்றாரா? என்பதை அவர் வார்த்தைகளில் காணமுடியவில்லை. துண்டுவிழும் பட்ஜெட்டைப் பற்றி பேசுகின்ற பொழுது "Deficit Budget is not bad. It is a virtue also" என்று சில அங்கத்தினர்கள் பாராட்டினார்கள். கனம் அங்கத்தினர் ஸ்ரீ முத்தையா செட்டியார் அவர்கள் "இதுதான் ஒரு நல்ல பொருளாதாரம். பன்னெடுங்காலமாக நான் கூறிக்கொண்டு வந்த யோசனையை இப்பொழுதுதான் ஏற்றுக்கொண்டார்கள்" என்று மிக மிக அவசரமாக கூறிச் சென்றார்கள். பற்றாக்குறை பட்ஜெட்டின் மூலம் நாட்டு நலனைச் சரிக்கட்ட விரும்பினாரா? அல்லது நிதி அமைச்சருக்கு கட்டுக்கடங்காத நிலைமையில் இந்தப்பட்ஜெட்டை கொண்டுவந்திருக்கிறாரா என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் இரண்டிற்கும் அடிப்படையிலே வித்தியாசம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்,

ஜெர்மன் தேசத்தை ஆண்ட ஹிட்லர் துண்டு விழும் பட்ஜெட்டை சர்க்கார் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான