உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஆயுதம் என்று கருதி, கட்டுக்கடங்காத அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, ஏராளமான ஜெர்மன் மார்க்கு நோட்டுகளை அடித்து துப்பாக்கியின் துணை கொண்டு விநியோகித்து, தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி காப்பாற்றிக்கொள்ள முடிந்தது, பற்றாக்குறை பட்ஜெட்டின் மதிப்பையும் நிதி அமைச்சர் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. ஒரு சமயம் நிதி அமைச்சர் அவர்கள் துண்டு விழும் பட்ஜெட் இருப்பதுதான் சரி என்று கருதுகிறாரா என்பதற்காக சென்ற ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மீது அவர் நிகழ்த்திய பேருரையை நான் மிக்க கவனத்தோடு பார்த்தேன். விசித்திரம் என்னவென்றால் இன்று அவர் துண்டு விழும் பட்ஜெட் சமர்ப்பித்ததற்காக எப்படி பாராட்டப்பட்டிருக்கிறாரோ, அதே மாதிரிதான் அன்று இதே மன்றத்தில் அவர் அதிக வரி போட்டதற்காகப் பாராட்டப்பட்டிருக்கிறார். (சிரிப்பு.) நிதி அமைச்சர் தனது நிலைமைக்கேற்ப வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கிறார் என்று கருதுகிறேன், பாராட்டுதல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஆனால் கொஞ்சம் அது அதிகமாய் போய்விட்டது என்பது உள்ளபடியே என்னுடைய வருத்தம்

துண்டுவிழும் பட்ஜெட் போடுகின்ற நேரத்திலே புதிய வரிகளை அவர் போடவில்லை என்பதைப்பற்றியும் சில உறுப்பினர்கள் வரவேற்றுப் பேசினார்கள். என்னை பொறுத்த வரையில், என்னுடைய கட்சியைப் பொறுத்தவரையில் வரி அதிகமா, குறைவா என்பதைப் பொறுத்து ஒரு நாட்டின் கஷ்ட நஷ்டமில்லை என்ற கருத்துக்கொண்டவர்கள் நாங்கள். தாங்குபவர்கள் மீது வரிபோடுவதும் தாங்கமுடியாதவர்கள் மீது இருக்கும் வரியைக் குறைப்பதும்தான் நான் படித்த பொருளாதார அரிச்சுவடியில் போதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நிதி அமைச்சர் அதற்குமேல் படித்த பொருளாதாரத்தில் வேறு விதமாக போதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவருக்கு நிர்வாகத்தில் ஏதாவது புதிய அநுபவம் ஏற்பட்டிருக்கிறதோ என்னவோ! (சிரிப்பு.) பொருளாதார தத்துவத்தை விளக்கினவர்கள் 'Pogressive taxation,' regressive taxation' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதையே வேறு விதமாக 'direct taxation' indirect taxation' என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிமிடம் வரையிலே நமது வரவு செலவுத் திட்டத்தில் பார்த்தால் ஏழை மக்கள் தருகின்ற விற்பனை வரியிலிருந்துதான்