33
நமக்கு கணிசமான அளவுக்கு பணம் வருகிறது. எத்தனையோ துறைகள் இந்த நேரத்திலே கவனிக்காமல் விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன என்று எத்தனை பெரிய கூக்குரல் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கிறது? உண்மையிலேயே விற்பனை வரி மக்களை வாட்டி வதைக்கின்றது என்பதை பல்வேறு கட்டத்தில் எடுத்துகாட்டியிருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் எல்லாம் எதிர்பார்த்தது என்னவென்றால் உணவுப் பொருள்களுக்காவது நமது நிதி அமைச்சர் விற்பனை வரியிலிருந்து விலக்களிப்பார்கள் என்பதுதான். தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய வியாபாரிகளும் வியாபாரச் சங்கங்களும் பலகாலமாக பல்வேறு மகாநாடுகள் கூட்டி, அவைகளுக்கு அமைச்சர் சிலரைக் கூட வரவழைத்தும், அவர்களிடம் மகஜர்கள் சமர்ப்பித்தும் தங்களுடைய குறைபாடுகளை எடுத்துச் சொல்லி "பல்வேறு கட்டங்களில் போடுகின்ற விற்பனை வரியை ஒரேகட்டத்தில் போட்டால் நாங்கள் திருப்தி அடைவோம்" என்று எடுத்துச் சொன்னார்கள். முதலமைச்சர் வியாபாரக் கூட்டம் நிறைந்த விருதுநகரைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வாறு செய்வார் என்று நினைத்தோம். வியாபாரிகளுக்குச் சலுகை காட்டுகிறார் என்று நாங்கள் சொல்லுவோம் என்று அஞ்சி ஒருவேளை அக் காரணத்தினால்தான் விற்பனை வரி விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருக்கிறார்களோ என்று எண்ணுகிறேன். அப்படி நாங்கள் சொல்லமாட்டோம், மற்ற விஷயங்களைக் கருதி அப்படிச் செய்திருந்தால் போகட்டும். ஆனால் எங்களுக்காக அப்படிச் செய்திருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு முனை விற்பனை வரி போடவேண்டுமென்றும், உணவுப்பொருள்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்றும் கருதுகிறேன்.
நிதி அமைச்சர் அவர்கள் foodgrains என்பதை foodstuffs என்று மாற்றினால் ஓரளவுக்கு நாட்டிலே நல்ல திருப்தி ஏற்படும். வார்த்தைகள் மாற்றம், ஊர்களின் பெயர்கள் மாற்றம்தான் "எங்கள் கட்சியின் திட்டம்" என்று சொல்லுவதாக அவர் புன்னகை எடுத்துக்காட்டுகிறது. (சிரிப்பு.) நாங்கள் சொல்லுகின்ற திட்டங்களெல்லாம் செலவு இல்லாத திட்டங்கள்தான். பெரிய செலவுத் திட்டங்கள் கொடுத்தால் அவர்கள் தான் எங்கு போவார்கள்? வடக்கே போகிறார்கள். ஆனால் அங்கு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். (சிரிப்பு)