உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

உணவு தானியங்கள் என்பதை உணவுப் பொருள்கள் என்று மாற்றி அவைகள் மீது விற்பனை வரியை நீக்கினால், அதனால் சில லட்சரூபாய் தான் வருமானம் குறையும், ஆனால் மக்கள் சாப்பிடுகின்றபொழுது சர்க்காரை மனமார வாழ்த்துவார்கள். உணவு சாப்பிடுகின்ற நேரத்திலே "நல்ல சர்க்கார் நாட்டில் நிலவுகிறது, நல்ல மந்திரி சபை நாட்டிலே ஆளுகிறது, உணவுப் பொருள்கள் மீது வரியை எடுத்துவிட்டார்கள்" என்று மனமார வாழ்த்துவார்கள். சட்ட சபையிலே பலபேர்கள் வந்து போகிறார்கள். ஜனநாயகத்தின் பரிசாக இதை மதிப்பார்கள். முதல் கவளத்தில் முதலமைச்சரை வாழ்த்துவார்கள். இரண்டாவது கவளத்தில் நிதி அமைச்சரை வாழ்த்துவார்கள். நிதி அமைச்சர் C. சுப்பிரமணியம்:- மூன்றாவது கவளத்தில் இதை எடுக்கச் சொன்னவரை வாழ்த்துவார்கள். (சிரிப்பு.)

திரு. C. N. அண்ணாத்துரை:—சாப்பிடுகின்ற நேரத்திலே சாப்பாட்டுப் பொருள்கள் மீது வரியில்லை என்று பொதுமக்கள் ஒருமுகமாக வாழ்த்துவார்கள். சாப்பிடும்பொழுது வாழ்த்துவது நல்லது என்று வைதீகர்கள் கூறுவார்கள். மற்ற விஷயத்தில் வைதீகத்தில் வேறுபட்ட கருத்தைக்கொண்ட நான் இது விஷயத்தில் வேண்டுமானால் ஒத்துக்கொள்ளுகிறேன்.

வரவு செலவுத்திட்டத்தில் புதுவரி போடாதது பற்றி இங்கே பேசிய பல காங்கிரஸ் உறுப்பினர்கள் எடுத்துக் காட்டினார்கள். நிதி அமைச்சர் வரி போடாததற்குக் காரணம் பற்றி என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால் ஏற்கனவே பட்ட அடியால் ஏற்பட்ட தழும்பு மாறாமல் இருக்கும்பொழுது தானும் அதன் மேல் அடிக்கவேண்டுமென்று வரி போடாமல் விட்டிருக்கக்கூடும் என்று கருதுகிறேன். (சிரிப்பு) எப்பொழுதும் நிதி அமைச்சர்கள் மன அரிப்புக் கொண்டவர்கள். ஒரு தடவை நிதி அமைச்சர் பீடத்தில் உட்கார வைத்துவிட்டால் எப்பொழுதும் கனவிலும் நினைவிலும் அவருக்கு வரி என்ற நினைவுதான். ஒரு ஹாஸ்ய பத்திரிகையில் படித்தேன். மனைவி கட்டிக் கொண்டிருக்கும் சாதாரண சேலையைப் பார்த்து நிதி அமைச்சர் "இதில் வரி இல்லையா? என்று கேட்டாராம். அங்குகூட நிதி அமைச்சருக்கு வரியின் கவனம் போகவில்லை. கற்பனை நிதி அமைச்சரைப்பற்றி நான் குறிப்பிட்டேன்; இந்த நிதி அமைச்சரைப் பற்றி அல்ல. (சிரிப்பு.)