உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வரையில் பொறுங்கள்" என்று அடுத்த ஆண்டுக்குக் காக்க வைக்கிறார் என்று தோன்றுகிறது.

வரி என்று குறிப்பிடுகிற நேரத்தில், வரிகளுடைய முறைகளைப் பார்த்துத்தான் ஆளும் கட்சி அல்லது சர்க்காருடைய போக்குகளை நாம் தீர்மானித்துக் கொள்ள முடியும் அதனாலே தான் பல்வேறு கட்சிகள், முற்போக்குக் கட்சிகள்—இந்த நாட்டை இன்று யார் ஆளுகிறார்களோ, அவர்களுடைய திட்டங்கள் சமதர்மம் பொருந்தியவை என்று எடுத்துச் சொல்லியும், அதற்கேற்றபடி நடக்கவில்லையே என்று வருத்தப்பட்டார்கள். அப்பேர்ப்பட்ட வருத்தத்திற்குக் காரணம் புரிகிறது, நம்முடைய ஆட்சியாளர்கள், "சமதர்மம்" சமதர்மம் என்று எடுத்துச் சொல்கிறார்களே தவிர, அவர்கள் இன்றைய தினம் கையாளுவதெல்லாம் சமய தர்மமே தவிர, சமதர்மம் அல்ல. அதாவது, சமயத்திற்கேற்றபடி சில தர்மங்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயோ, போதும் வரி போடுவதற்கு இது சமயம் அல்ல. ஆகவே, இப்பொழுது வரி போட வேண்டாம் என்ற அந்த முறையிலேதான் இவர்களுடையது சமதர்மமாக இல்லை, சமய தர்மமாகத்தான் இருக்கிறது.

இனி வரவு செலவுத்திட்டத்தின் காலத்தைப்பற்றி யோசிக்கும்போது முதல் ஐந்தாண்டுத் திட்டம் முடிவுற்று இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் துவக்கத்தில் இருக்கிறோம். முதல் ஐந்தாண்டுத் திட்டம் நம் நாட்டை ஓரளவு சீர்படுத்தி இருக்கிறது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் மேலும் சீர்படுத்தும். ஆகையால், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியிலே புதிய வரியைப் போட்டாலும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்ற வாதத்தை என்னால் புரிந்துகொள்ள முடியாது. எப்பொழுது புரிந்துகொள்ள முடியும் என்றால், முதல் ஐந்தாண்டுத் திட்டம் உண்மையிலேயே சகல ஏழைஎளிய மக்களுக்கும் நன்மை பயக்கிறது என்று புள்ளி விவரங்களோடு காட்டி, நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு, முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே அவர்களுக்குக் கிடைத்த வலுவு காரணமாக, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை வாங்கிக்கொள்ள கூடிய வலுவு ஏற்படுமானால் அப்பொழுது அவர்களுடைய வாதத்தை உண்மையில் பாராட்டக் கூடும்,