உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அளவுக்கு வரி போய்க் கொண்டிருக்கிறதென்பதை ஸ்ரீமன் நராயண் அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அது மட்டுமல்ல. குறிப்பாக, ஐந்தாண்டுத் திட்டத்தைப்பற்றி அவர் குறிப்பிடும்போது, "The common man has not been able to feel the glow of freedom during the last few years !n accordance with his expectation" என்று சொல்லியிருக்கிறார்.

இந்தச் சர்க்காரிடத்திலே இதைச் செய்யவில்லை அதைச்செய்யவில்லை என்று பல பேர்கள் கேட்கும்போது, சர்க்கார் கட்சியில் இருப்பவர்கள் இது என்ன எப்பொழுது பார்த்தாலும் குறைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!" என்று சொல்லலாம். சார்காரிடத்திலே அபாரமான நம்பிக்கை காரணமாகத்தான் மக்கள் இன்றைய தினம் கேட்கிறார்கள். அதைக்குறித்து சர்க்கார் கட்சியிலே இருப்பவர்கள் பெருமைப்படவேண்டும். வெள்ளைக்காரர்களாக இருந்தால் அவர்களைக் கேட்டிருக்க மாட்டார்கள். வெள்ளைக்காரர்கள் காலத்தில் அரிக்கேன் விளக்குத்தானே இருந்தது இப்பொழுது நம் காலத்தில் பெரிய ட்யூப் "விளக்குப் போடப்பட்டிருக்கிறதே" என்று பெருமை பாராட்டிக் கொள்ளாதீர்கள். அப்படிப் பெருமை பாராட்டிக் கொள்வீர்களானால், வெள்ளைக்காரனும் அப்படித்தான் சொன்னான் "ரயிலையே பார்க்காத உங்களுக்கு ரயிலை நான்தானே காட்டினேன்; அப்படியிருக்க, அதிலேயே ஏறி என்னைப் போகச் சொல்கிறாயே" என்று. ஆகையால் வெள்ளை ஏகாதிபத்தியத்திலிருந்து பழுப்பு ஏகாதிபத்தியமாக காங்கிரஸ் ஜனநாயகம் மாறக்கூடாது என்று கவலை கொண்டு ஸ்ரீமன் நாராயண் சொல்கிறார்.

The fact remains that our plans and projects have not yet been able to touch visibly the poorest sections of the population" என்று.

மற்றும் ஒன்று கூற ஆசைப்படுகிறேன். நம்முடைய முதல் அமைச்சர் அவர்களுடைய நிர்வாகத்தின் கீழ் வந்திருக்கிற "கம்யூனிடி பிராஜெக்ட்"டைப் பற்றியும் ஸ்ரீமன் நாராயண் குறிப்பிடும்போது, அதை திருப்திகரமான நிலையில் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதாவது : "Even in the Community Projects and National Extension Services, it is now being admitted that the lowest sections of the rural population have not been benefited to any considerable extent."