உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

யாமல் நீங்கள் லாபம் அடைந்தால், நாங்கள் ஏன் குறுக்கே நிற்கப் போகிறோம்? வியாபாரத்தில் அதெல்லாம் சாதாரணமாக ஏற்படக்கூடியது தான். ஆனாலும், இப்படி யாரோ ஒன்றிரண்டு பேர் புகழ்ந்து பேசிவிட்டார் என்பதற்காக இலகுவாகத் திருப்தி அடைந்துவிடக்கூடிய சபல மனம் படைத்தவர் அல்ல, நம் நிதி அமைச்சர் அவர்கள் என்பதை அறிந்த காரணத்தால் நான் அவர்களைப் பாராட்டாமல் இருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் அன்பு காரணமாக சிலர் பாராட்டிப் பேசினார்கள். அப்படி பேசுவதும் நல்லது தான் அது இருக்கட்டும். நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள், தம்முடைய வசதிக்கேற்ற அளவில், பிரித்து வைத்திருப்பதில் அவர்கள் செய்திருக்கிற நல்ல ஏற்பாடுகள், உண்மையிலேயே வரவேற்க வேண்டியதாய் இருக்கின்றது. ஆனால். அந்த ஏற்பாடுகளை வரவேற்கின்ற நேரத்திலே, அவைகளை மூன்றாக வகுத்துப் பார்த்துத்தான் நம்முடைய தீர்ப்பை அளிக்க வேண்டி இருக்கின்றது. அதாவது ஒன்று, போடுகின்ற திட்டம்; இரண்டாவது, திட்டத்திற்கு ஒதுக்கப்படுகின்ற பணம்; மூன்றாவது, அந்தப் பணத்தைச் செலவு செய்கின்ற நிர்வாக முறை. இந்த மூன்றும் சரிவர இருந்தால் தான் உண்மையிலேயே நம்முடைய திட்டங்கள் நல்ல பலனை அளிக்கும். உதாரணமாக, நமது நிதி அமைச்சர் அவர்கள், போன ஆண்டு 38 விதைப் பண்ணைகள் திறக்கப்பட்டன. இவ்வாண்டிலே 136 பண்ணைகள் திறப்பதாகத் தீர்மானித்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அது நியாயமான, தேவையான. மக்களால் வரவேற்கத்தக்க ஒரு திட்டமாகும். இத் திட்டத்தை நிறைவேற்றுகிற நேரத்தில், இந்தப் பண்ணைகள் எந்த முறையில் வளர்க்கப்படுகின்றன, இந்தப் பண்ணைகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிலங்கள் யாரிடத்திலே வாங்கப்படப் போகின்றது, அப்படி வாங்கப்படுகின்ற நிலங்களுக்கு விலை எப்படி நிர்ணயிக்கப்படும் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும். அந்த நிலங்களுக்குப் பதிலாக, நிலச் சுவான்தார்களைக் கூப்பிட்டு-அந்த நிலச்சுவான்தார்களிடத்திலே இருக்கிற ஏராளமான நிலத்தில் ஒரு பகுதியில் கட்டாயமாக விதைப் பண்ணைகள் வைக்க வேண்டும் என்று சட்ட பூர்வமாக சொல்லிவிடலாம்—ஆனால், ஆளும் கட்சியில் அன்பு பாராட்டும் பல நிலச்சுவான்தார்கள் இருப்பதால்—அவர்களுக்கு கனிவாக எடுத்துச் சொல்லி, உங்களிடத்திலே இருக்கும் நிலத்திலே ஒரு பகுதியை விதைப் பண்ணைக்கு ஒதுக்கி வைக்கவேண்டும் என்று சொன்னால் அவர்கள்