உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அமர்ந்திருக்கிற தாங்கள் கொடுக்கும் ஆணைகளுக்கு உட்பட்டு நடப்போம் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாங்கள் எல்லாம் ஒரு விசித்திர அரசியல் கூட்டத்தினர் என்று நீங்கள் அறிவீர்கள்; இந்த சபையும் அறியும். நாங்கள் ஒரு விசித்திர அரசியல் கூட்டத்தினர் என்றால் எங்களைத் தோற்றுவித்ததும் நாட்டிலுள்ள ஒரு விசித்திர நிலைமைதான் என்பதை யாவரும் உணரவேண்டும். விசித்திரமான நிலைமைகள் விசித்திரமான கட்சிகளை ஏற்படுத்துகின்றன.

உண்மையிலேயே ஒரேவிதமான உடற்கூறு படைத்தவர்கள் சிற்சில வியாதிகளுக்கு உட்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிறந்த மருத்துவர் என்ற முறையில் அவர்களுடைய வியாதிக்கு மூலகாரணம் என்ன என்பதைப் பற்றியும் நீங்கள் ஆராய்ந்து சிகிச்சை செய்திருப்பீர்கள். வெளியே தோற்றுகின்ற புறக்குறிகளை மாத்திரம் பார்த்து சிகிச்சை அளிக்கக்கூடாது என்பது தங்களுக்குத் தெரியாதது அல்ல. உங்களுடைய பேட்டையில் எத்தனையோ நோயாளிகள் இளைத்தவர்களாக உங்களிடம் வந்து திடகாத்திரர்களாகத் திரும்பி இருக்கிறார்கள். அவ்வாறு திரும்பிய பல பேர்களிடத்தில் இருந்து நான் அறிந்துள்ளபடி தாங்கள் முதலில் புறத்திலே தோற்றும் குறிகளைக் கண்டு, அக்குறிகளைத் தோற்றுவித்த மூலகாரணத்தை உணர்ந்து சிகிச்சை செய்யும் வழக்கத்தை இங்கும் கையாள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் படைத்துள்ள நல்ல ஜனநாயகக் கண்ணோட்டத்தோடு எங்களுடைய குறைபாடுகளையும் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நம் நாட்டில் அரசியலில் மட்டும் அல்ல, ரெயில் வண்டிப் பிரயாணத்திலும் கூட யார் முதலில் வண்டியில் ஏறி இடம் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்கள் அடுத்து வருகிறவர்களைத் துரத்துவதைப் பார்க்கிறோம். சட்ட மன்றத்திலும் அந்த மனப்பான்மை நீண்டகாலத்திற்கு இருக்கத்தான் செய்யும். பின்னே வருகிறவர்கள் முன்னே வண்டியில் ஏறிக்கொண்டு தங்களை ஏறவிடாமல் தடுக்கிறவர்களின் மனம் புண்படாமல் மெள்ள உள்ளே ஏறி நுழைந்து கொள்வதைப் போலத்தான் நாங்களும் தட்டுத்தடுமாறி இந்த சபைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். இந்த அரசியல் ரெயில் வண்டிக்குள் ஆதிக்கம் வாய்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் முகம் சுருங்கும் வகையில், அவர்களைப்