பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அடுத்தது கதர்த் தொழிற்சாலை - அது நமது நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் பெருத்த நஷ்டத்தைத் தருகிறது. ஆகவே இத்தகைய நிலையில் - பற்றாக்குறை பட்ஜெட் இருக்கும் நிலையில் - திரைப்பட முதலாளிகள் - வரிக்குறைப்பை எதிர்பார்ப்பது சரியல்ல ! ஆனால், அதே சமயத்தில் வரி விதிப்பினாலேயே ஒரு நல்ல தொழில் அழிந்து போவதை நாங்கள் விரும்ப மாட்டோம்.

மாநில அரசின் நிதிநிலைமை சரியானதும் திரைப்பட முதலாளிகளின் கோரிக்கைகள் நிச்சயம் கவனிக்கப்படும். திரைப்படத் தணிக்கையில் உள்ள தொல்லைகள் பற்றியும் தயாரிப்பாளர்கள் வருத்தப்படுவது எனக்குப் புரிகிறது. தணிக்கையினால் ஏற்படுகிற கஷ்டம், எதை வெட்ட வேண்டுமோ அதை விட்டு விடுகிறார்கள். எதை விட்டுவிட வேண்டுமோ அதை வெட்டி விடுகிறார்கள்.

பாலுணர்ச்சி மிகுந்தது என்று 15 வருடத்திற்கு முன்பு கருதப்பட்டவை இன்று சர்வ சாதாரணமான காட்சியாகி விட்டது. இன்று அப்படிப்பட்ட காட்சி ஐந்து வருடத்தில் சாதாரணமாகிவிடும். ஆகவே ஆபாசம் என்பது பார்ப்பவரின் மனதுக்கு கண்ணுக்கு காலத்துக்கு ஏற்றவாறு இருக்கிறது.

ஒரு அழகான பெண்ணைத் திரையில் காட்டுவதால் என்ன தவறு என்று ஒருவர் கேட்டார். தவறு எதுவுமில்லை - அது அழகான பெண்ணாக இருந்தால். அழகான பெண் என்று, பார்ப்பதற்குத் தேவையில்லாத பகுதிகளை - அளவுக்கு மீறிய மேக்-அப்புடன் காட்டுவது தான் எரிச்சலூட்டுகிறது.

ஆகவே மக்களின் சுவையை அறிந்தவர்கள் - சுவை மாறும் தன்மையை அறிந்தவர்கள் தணிக்கைக் குழுவில் இடம் பெற வேண்டும். அத்தகைய முறையால் திரை உலகம் சீர்திருத்த நிலையை அடைய வேண்டும்.