இரா: அரக்க மாதல்ல, நீதி தேவா! கைகேயி, அம்மை! தசரதன், சோகமுற்று, மானே மடமயிலே! கேகயன் மகளே கேளடி என்மொழியை! பேயும் இரங்குமே பெண்கட்கரசே நீ இரங்காயோ? என்று எவ்வளவோ கெஞ்சினான்! கைகேயி மன்னனின் புலம்பலைக் கேட்டும் மனம் இளகவில்லை. மன்னன் மூர்ச்சித்துக் கீழே வீழ்ந்தான், அம்மையின் மனதிலே இரக்கம் எழவில்லை. கம்பர் கூறினார், மன்னர் பலர், எந்தத் தசரதனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்களோ, அப்படிப்பட்ட மன்னர் மன்னன், கைகேயியின் காலிலே வீழ்ந்தான்! கைகேகி சூழ்வினை படலம், 25-வது செய்யுள். தன் மணாளன், மன்னர் மன்னன் தன்காலில் வீழ்ந்து அழுது, கெஞ்சி, எனக்கு உயிர்ப்பிச்சை தரவேண்டும், என்மகன் இராமன் நாடாளாவிட்டால் போகிறது. காடுபோகச் செய்யாதே, அவன் போனால் என்உயிர் நில்லாதே! என்று உள்ளம் உருகிக் கதறுகிறான், கேகயகுமாரி, அப்போதாவது இரக்கம் காட்டினதுண்டா? இல்லை! கோசலை அழுத போது? இல்லை! சீதை, மரஉரி தரித்தபோது? இல்லை! ஊரே புரண்டு அழுதபோது? இல்லை! துளியும் இரக்கம் காட்டியதில்லை. வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன் அன்றிரவு துயிலில் நிம்மதியாக ஈடுபட்டார்களாம் கம்பர் கூறினார். உண்மை தானே கம்பரே!
க: உண்மைதான்!
இரா: இரக்கம் என்ற ஒருபொருள் இல்லாதார் அரக்கர்! உமது இலக்கணமல்லவா அது? கைகேயி அம்மையிடம் அந்த இரக்கம் ஒரு துளியும் இல்லையே, ஏன் அரக்கர் குலமாக்கவில்லை அம்மையை! இரக்கமென்ற ஒருபொருள் இல்லாத காரணத்தாலேயே நானிருந்த இலங்கை அழிந்தது என்றீரே, இரக்கத்தை எள்ளளவும் கொள்ளாத இந்த அம்மையார் இருந்தும், அயோத்திக்கு அழிவு வராத காரணம் என்ன? என் தங்கைக்குப்பங்கம் செய்தவர்களை, பழிவாங்கவேண்டுமென்ற எண்ணம் என்கண்முன், சீதை கதறியபோதிலும், இரக்கப்படக்கூடாது, இரக்கத்துக்காகவேண்டி, அரக்கர்குல அரசமங்கையின் அங்கத்தைத் துண்டித்த ஆரியர்களை வதைக்காது விட்டோமானால் அரக்கர் குலத்தையே ஆரியகுலத்தின் அடிமையாக்கிவைக்கும் இழி செயல் புரிந்தவனாவோம் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின்முன் இரக்கம் தலைகாட்டவில்லை! இரக்கம் காட்டாததற்காக நான் அழிந்துபடுவது! இரக்கமின்றி என் தங்கையைப் பங்கப்படுத்தி, வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன், தெய்வமென்று கொண்டாடப்படுவது, தேன்தமிழிலே இந்தக் கம்பனுக்குப் பாட்டுக் கட்டத் தெரிந்ததால். நீதி தேவா!
16
121