ஜ: வா, தம்பீ, வா. ஏது இவ்வளவு நேரத்தோடே, இவ்வளவு தூரம்?
பீ: எல்லாம் உங்களைப் பார்த்துப் போகத்தான்.
ஜ: நல்லா பாரு, தம்பீ—நிக்கிறியே, உக்காரு.
பீ: நாட்டிலே, காங்கிரஸ்காரன் என்று சொல்லிக்கொண்டு வெளியில் வரமுடியவில்லை. அப்படி செய்துவிட்டார்கள், இல்லாததையும், பொல்லாததையும் பேசி, காங்கிரஸ் என்றாலே கசக்கிறமாதிரி பண்ணிவிட்டார்கள். காங்கிரஸ் என்றாலே வெறுக்கும்படி, மக்களை மாற்றிவிட்டார்கள்! திராவிடத்தான்களுடைய கொட்டம் வளர்ந்துகொண்டே போய்விட்டது. அவன்களை அடக்கலேன்னா, காங்கிரஸ் இனி செத்துப்போய் விட்டதென்றே வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.
ஜ: சரி, தம்பீ! இப்ப அதுக்கு என்ன செய்யவேணும் சொல்லு.
பீ: இவ்வளவு விளக்கமாக நான் நிலைமையை எடுத்துக் காட்டின பிறகும், எதிர்காலம் எவ்வளவு இடர் உள்ளதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிறகும்...
ஜ: தம்பீ! பதறாம பேசு. நீ சொன்னது உண்மை—எழுத்துக்கு எழுத்து உண்மை, நான் அதைப் புரிந்துகொள்ளவில்லையா என்ன! நல்லா புரியுது. நான் இப்ப உன்னை கேட்பது என்னான்னா, இப்ப என்ன செய்யவேணும்ன்னுதான்.
124