ச: பீரங்கீ! தூக்கம் வர்ரது சட்டசபையிலேன்னா, என்னய்யா அர்த்தம்! தூங்கறவாளைக் கோபிச்சிண்டு பேசறீர்...சரி...அவா தூங்கினது தவறுன்னே வைத்துக்கொள்வோம்—தூக்கம் வந்ததே சட்டசபையிலே, அதைக் கவனிச்சீரா.....என்ன பொருள்? அவ்வளவு அசமந்தமா, சோபை யில்லாமல் இருக்கு உம்ம சட்டசபை...
ஜ: அதைச் சொல்லுங்க சாமி, அதைச் சொல்லுங்க......என்ன பிரமாதமான காரியம் நடக்குது சட்டசபையிலே......முதலிலேயே கட்சிக் கூட்டம் நடத்தறாங்க......அங்கே ஒரு நாலைந்து பெரிய தலைங்க எதை எதையோ எழுதி இதெல்லாம் சட்டம்னு சொல்ல எல்லோரும் வந்தே மாதரம்னு சொல்லி சம்மதம் கொடுத்து விடறாங்க, பிறகு, சட்டசபையிலே கூடி அதையே நிறைவேத்தறாங்க—வெட்டி வேலை—தூக்கம் வராமலா இருக்கும்.........
ச: பீமராவுக்கு இதெல்லாம் புரியாது இல்லே...அவருக்குத்தான் காளான் விஷயமே புரியல்லய்யே! காளான்னா மகாகேவலமானது என்றுதானே எண்ணிண்டிருக்கார்.
பீ: என்னய்யா இது, காளானை எடுத்துக்கிட்டு நாலு நாழியா காலட்சேபம் செய்திண்டே இருக்கீர்...என்ன கண்டு விட்டீர் காளானைப் பத்தி...
ச: நானா...! நன்னா சொன்னே, போ...நான் என்ன மேதாவியா...போறது...பென்சிலின் தெரியுமோ?
பீ: பென்சிலின்—மருந்தா?
ச: ஆமாம்...மருந்துன்னா சாமான்யமானதா...அடடா, சகல ரோக நிவாரண சஞ்சீவி அல்லவா அது...
ஜ: ஆமாம்...எப்படிப்பட்ட ரணமும் ஆறுதாமே...
ச: எந்த வியாதியா இருக்கட்டும்.....கட்டுக்கு அடங்காம படிக்கு, மீசுரமாகிவிட்டா, இந்தப் பென்சிலின் தர்ரா...உடனே நோய், பெட்டிப் பாம்பாகிவிடறது...அவ்வளவு அற்புதமான மருந்து பென்சிலின்.
பீ: {சலிப்புடன்) சரி அதனாலே...
ச: அதனாலே என்கிறீரா...அவசரம் உமக்கு.....பீரங்கி அல்லவா, அப்படித்தான் இருக்கும் அவசரம்.
பீ: கேலி போதும் ஐயரே! விஷயத்துக்கு வாரும்.....பென்சிலின் அற்புதமான மருந்து...அதனாலே?
134