உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ச: ஒத்துக்கொள்கிறீரா........பென்சிலின் அற்புதமான மருந்து, என்பதை.

பீ: ஆமாம்........

ச: அந்தப் பென்சிலின் இருக்கே அது, நீர் கேவலமானதுன்னு நினைக்கிறீரே, காளான், அந்தக் காளானிலிருந்துதான் செய்யறா........

ஜ: (ஆச்சரிய மேலிட்டு) அப்படியா, சாமி!

ச: ஆமாம்...காளானிலிருந்து தான் பென்சிலின் செய்யறா...பீமராவுக்கு அது என்ன தெரியும், பாபம், அவர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அனந்தம்......காளானோட அருமை எங்கே தெரியப்போது......பீமராவ்! எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதுபோல முகம் இருக்கு. பிரபஞ்சத்திலே, உம்மைத் தவிர மத்தவாளெல்லாம் ஞான சூன்யான்னு எண்ணிண்டு, பெரியவாளை ஏசறதும் மிரட்டறதுமா இருக்கக் கூடாது...பீரங்கிதான் நீர்! ஆனா, எதற்குப் பயன்படவேண்டும், பீரங்கி—இவர் பேரிலே குண்டு வீசவா.....பைத்யக்காரர்—சுமுகமாக, சாந்தமாப்பேசி, என்ன காரியத்தைச் சாதிக்கவேணுமோ, அதைச் சாதிச்சிண்டு போறதா, சம்வாதம் செய்துண்டு, சச்சரவு செய்துண்டு இருக்கறதா?

ஜ: நல்லா சொல்லுங்க சாமி! மனதிலே ஆழமா அழுத்தமா படற மாதிரியாகச் சொல்லுங்க......

ச: (பீமராவிடம்) மகாநாடு போடவேணும் என்கிறீர்—செய்யவேண்டியதுதான்...ஆனா, பூராவும் இவர் தலையிலேயே போடலாமா.....இவர், இப்ப, எம். எல். ஏ. அதனாலே, ஏதோ அவருடைய அளவுக்குக் கொஞ்சம் செய்யத்தான் வேணும்—செய்யத்தான் போறார்......ஆனா, இவரை மட்டும் இழுத்தா போதுமோ....அடுத்த எலக்க்ஷனிலே, யார் எம். எல். ஏ.-வுக்கு நிற்கப்போறதுன்னு கண்டுபிடியும்—அவரைப் போய்ப் பிடித்து உலுக்கி எடுக்கவேணுமே.......

பீ: எலக்க்ஷனுக்காகத்தானா இவ்வளவும்......

ச: (குறும்பாக) பின்னே எதுக்கு? நமக்குள்ளே பேசிக் கொள்வோம், பீமராவ்! வேறே எதற்கு இந்த மகாநாடு....

பீ: எலக்க்ஷன் விஷயத்தோடுகூட, நமது புனித காங்கிரஸ் மகாசபையினுடைய செல்வாக்கையும் கவனிக்கவேண்டும்—அதுதான் முக்கியம்.

135