உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊழி: தப்பாவே, எடுத்துக்கொள்றீங்களே ஏதாவது கேட்டுப் பெறுவதுன்னா, உங்களோடு சிநேகமா இருந்தா கிடைக்காதா? பத்துக்கேட்டா, ஒண்ணாவது கிடைக்குமே........விரோதித்துக்கொண்டு, என்ன இலாபம்?

காம: வேறே என்னய்யா இப்ப இவங்களுக்குக் கவலை வந்துகுத்துது சொல்லு, கேட்போம். நான் படாத பாடுபட்டு பக்குவமாப் பேசி, உள்ளத்துக்கு உள்ளே இருப்பதை வெளியே தெரிய ஒட்டாதபடி சாமார்த்தியம் காட்டி, ஒரு பெரிய தொல்லையை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறேன்...இந்தத் தேர்தல் நேரத்திலே இது எப்படிப்பட்ட இலாபகரமான காரியம்...ஒரு பெரிய பட்டாளமே, இப்ப, நம்மோட வம்புதும்புக்கு வாராமே, வாழ்த்தி வரவேத்துகிட்டு இருக்குது...இலேசான ஆசாமிகளா, நெருஞ்சி முள்ளு மாதிரி, சதா சுருக்குச் சுருக்குன்னு குத்திகிட்டே இருக்கும்...அப்படிப்பட்ட ஆசாமிக, இப்ப, எவ்வளவு அன்பா, நேசமா இருக்கறாங்க......இந்தக் காரியத்திலே, இப்படிப்பட்ட 'ஜெயம்' கிடைக்கும்னு நானே, எதிர்பார்க்கவில்லை. எப்படியோ நம்மோட 'ஜாதக பலன்' என்றுதான் சொல்லோணும், வெற்றி கிடைச்சுது...பெரிய தொல்லை விட்டுதுண்ணு நம்ம ஆளுங்க மத்தக் காரியத்தைக் கவனிக்காமபடிக்கு......அவங்களோட சவகாசம் எதுக்கு? என்று கேட்டு, கொட்டிகிட்டே இருந்தா, எனக்குச் சங்கடமா இராதா......?

ஊழி: நாங்க சொல்கிறபடிதான் காமராஜர் நடக்கிறார், எங்களோட ஆள் ஆயிட்டார்—நாங்கதான் இப்ப ராஜ்யமே ஆளுகிறோம் என்றெல்லாம், அவங்க பேசறது கேட்டா, நம்ம ஆளுங்களுக்குச் சங்கடமா இராதா...?

காம: புத்தி எங்கேய்யா போச்சுது...நம்ம ஆளுங்க, கவனிச்சுப் பார்க்கவேணாமா...? எந்தக் காரியத்திலே, நான் விட்டுக் கொடுக்கறேன், எந்தக் கொள்கையிலே வளையறேன், சொல்லு கேட்பம் இந்தியான்னு வேண்டாம், திராவிடம் வேணும்னு எதாச்சும் பேசறனா.....நேத்துகூட, தனிநாடு கேட்கறது பைத்யக்காரத்தனம்னு நான் பேசி இருக்கறேன்.....

ஊழி: ஆமாமாம், நாங்ககூட பேசிக் கொண்டோம். இதைப் படிச்சா அவரு உங்களைத் தாக்குவாருன்னு கூட எண்ணிக் கொண்டோம்...

காம: போய்யா, அதுக்கு அவருக்கு நேரமே கிடையாதபடி நான் செய்து வைத்திருக்கறேன்...திராவிடநாடு கேட்கறது என்னோட கடமை—அது கூடாது என்கிறது காமராஜரோட

152