உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 8

இடம்:—மாதர் சங்கம்.
இருப்போர்:—சரசா, மற்றும் பெண்கள்.


[மாதர் சங்கம். சரசா தேவி டான்ஸ் நடக்கிறது. முடிந்ததும் மேடையில் ஒரு பெண் பேசுகிறாள்.]

ஒரு பெண்: தோழியர்களே! தோழர்களே ! எங்கள் மாதர் சங்கத்திற்கு தேவையாய் இருந்த நிதிக்காக ஸ்ரீமதி சரசா தேவி நடத்திய நாடக மூலமாக கிடைத்த ரூபாய் 4400-யும் அவர்கள் எங்களுக்கு தந்தார்கள். இந்த பேருதவிக்காக சரசா அம்மையாரை வாழ்த்துகிறது இச்சங்கம் (கரகோஷம்)

சரசா: தாய்மார்களே, சகோதரிகளே பெண்களின் விடுதலைக்காக நான் எப்பொழுதும் பாடுபடுவேன். நாம் எல்லோரும் சமம். எல்லோரும் ஒன்று, என்ற முறைப்படி தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை தகுந்த நிலையில் உயர்த்துவதற்கு நான் எப்பொழுதும் தொண்டு செய்வேன்! வந்தனம். (போகிறாள்)

காட்சி 9

இடம்:—வேதாசலம் வீடு.
இருப்போர்:—சரசா, அமிர்தம், மூர்த்தி.


[வீட்டில் அமிர்தம் சரசாவின் சேலையை உடுத்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாள். சரசா வருகிறாள்.]

சரசா: வேண்டியதானடி. இதுக்குத்தான் சேலையை மடித்து வைக்க இவ்வளவு நேரமா? அம்மாளுக்கு பேஷனில்லே கேட்குது. ஏண்டி உன் உடம்பில் இருக்கிற அழுக்கு பட்டால் என்னத்துக்கடி ஆகும்—சேலை.

[மூர்த்தி வருகிறான்.]

மூர்த்தி: சரசா, எப்போது பார்த்தாலும் அமிர்த்தத்தை மிரட்டுவதே உனக்கு வேலையாய்ப் போய்விட்டது.

சரசா: இந்த வீட்டில் ஒரு வேலைக்காரியை மிரட்டுவதற்கு கூட அதிகாரம் இல்லையா?

25

193