உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனந்: போதும், மூட்டை சுமப்பவனுக்கல்லவா தெரியும் கழுத்து வலி.

மணி: வலி இருக்கிறதென்று கருங்கல்லில் முட்டினால் வலி தீராது. மண்டைதான் உடையும்.

ஆனந்: போதும் உன் போதனை. எந்த வேதாசலத்தின் சதியால் என் தந்தை பிணமானாரோ அந்த வேதாசலத்தின் தலை கீழே உருளவேண்டும். இரத்தம் தரையில் ஆறாக ஓடினாலன்றி என் ஆத்திரம் தீராது. கொண்டுவந்த பணத்தை வக்கீலுக்கு இறைத்தேன். கேஸே போடமுடியாதென்று சொல்லிவிட்டான். இந்த வாளே வழக்கு மன்றம். இனி இந்தக் கையே சட்டம்.

மணி: அட நில்லப்பா? நீ வேதாசலத்தை வஞ்சம் தீர்க்க நினைக்கிறாய். ஆனால் அது கத்தியால் சாதிக்க முடியாது.

ஆனந்: முடியாதா? பார். ஒரு மணி நேரம் தீட்டினேன்; கூர்முனை எப்படி இருக்கிறது பார்.

மணி: கத்தியைத்தான் தீட்டினாயே ஒழிய உன் புத்தியைத் திட்டவில்லை நீ, வேதாசலத்தை கொன்று விடுகிறாய் என்று வைத்துக்கொள். ஆனால் இறந்துபோன உன் தந்தை பிழைத்து விடுவாரா? ஊரார் உன்னை சும்மா விடுவார்களா? அல்லது நீ ஒரு நல்ல காரியத்தை செய்து விட்டாய் என்று போலீஸ்காரர்கள் உனக்கு மெடல் கொடுப்பார்களா? ஆனந்தா வேண்டாம் இந்த விபரீத புத்தி.

ஆனந்: மணி, தர்ம உபதேசம் செய்கிறாயா?

மணி: தர்மம், கர்மம் என்று தலை முழுகி நெடு நாளாகி விட்டது. நான் சொல்வது யூகம். ஆனந்தா உன் தகப்பனாரை அவன் எப்படிக் கொன்றான். தடியால் அடித்தானா! கத்தியால் குத்தினானா? தற்கொலையைத் தவிர வேறு வழியில்லாமல் செய்தான்.

ஆனந்: மணி நீ என்னதான் சொல்கிறாய்?

மணி: என்ன சொல்கிறேனா? பழி வாங்கும் திட்டத்தை விட்டுவிடு. இதைக் கொண்டு அவனைக் கொஞ்சம், கொஞ்சமாக வாட்டி, வாட்டி வதைக்கவேண்டும். ஊரார் இப்பொழுது அவனைப் பற்றி எவ்வளவு மதிப்பாக பேசுகிறார்களோ இதே ஊரார்கள் அவன் யோக்கியதை வெளிப்பட்டு அவனை ஏசவேண்டும். அதற்கான வழிகள் நாம் செய்யவேண்டும்.

195