உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனந்: மணி, நீ சொல்வது அவ்வளவும் உண்மை. வேதாசலத்தைப் பழி தீர்ப்பதற்கு இந்த கத்தி தீட்டிப் பயனில்லை.

[கத்தியை தூக்கி எறிகிறான்.]

மணி: சந்தோஷம், குழியில் விழ இருந்தாய்; தப்பித்துக் கொண்டாய். நான் வருகிறேன்.

ஆனந்: மணி, வேதாசலத்தின் வேஷத்தை கலைக்கவேண்டு மென்று சொன்னாய். அதற்காக வழி சொல்ல வில்லையே,

மணி: பாடுபடாமல் பலன் கிடைக்குமா? பார் யோசித்து.

[போகிறான். ஆனந்தன் கோவில் சென்று காளியை வேண்டுகிறான்.]

பக்தர் சொன்ன ஞாபகம்: மகா சக்தி வாய்ந்தவளப்பா இந்த மாகாளி. இந்த மாகாளியை மனதிலே பக்தியோடு பூஜை செய்து நம்பிக்கையாக கும்பிட்டு வந்தால் இந்த உலகத்தில் நடக்காதது ஒன்றுமில்லை.

மற்றவர்: கண்கண்ட தெய்வமாச்சே யப்பா இது. எந்தக் காரியமாயிருந்தாலும் சரி கை மேலே பலன் கிடைக்கும்.

காட்சி 11

இடம்:—காளி கோயில்.
இருப்போர்:—மணி, ஆனந்தன்.


[ஆனந்தன் பரவசத்தால் பாடுகிறான். மணி வருகிறான்.]

மணி: என்ன ஆனந்தா ஒரே பக்தி பரவசம்.

ஆனந்: மணி, காளியை கும்பிட்டுப் போகலாமென்று வந்தேன். இந்தா பிரசாதம்.

மணி: பணம் கிணம் ரொம்ப தாராளமாக கிடைக்கிறதோ?

[பிச்சைக்காரன் வருகிறான்.]

பிச்சைக்காரன்: ஐயா, இந்த ஏழைக்கு ஒரு பிச்சை போடுங்க சாமி.

196