காட்சி 21
இருப்போர்:—ஆனந்தன், மணி.
ஆனந்தன் : பக்தன் வந்திருக்கிறானே, பூஜை வேளை தவறி, ஏன் என்று பார்க்கிறாயா? ஏ, காளி, உன்னையே நம்பித் தவம் கிடந்த என்னை, நீ கைவிடலாமா? மனிதர் கைவிட்டாலும் மாதா காப்பாற்றுவாள் என்று நம்பி இருந்த என்னை இக்கதிக்கு ஆளாக்கலாமா நீ? எவனுடைய சதியால், வஞ்சனையால் என் குடும்பம் நாசமாயிற்றோ அவனுக்காம்மா நீ அருள் புரிவது? இது முறையா? வேதாசல முதலி செய்துள்ள பாவங்களை நீ அறிய மாட்டாயா? எத்தனை குடும்பங்களை கெடுத்தான். ஒரு பாவமும் அறியாத என் தகப்பனை கொன்றான் பாவி. அவனுக்கு நீ எப்படி அருள் புரிந்தாய்! அதற்கு எப்படி உன் மனம் இடம் கொடுத்தது?
தாயே! இதோ, பார் என்னை! ஏழையைப் பார்!! உழைத்து, உழைத்து உருக்குலைந்து போன என்னைப் பார்!!! உன்னையன்றி வேறு கதியில்லை என்று நம்பி மோசம் போன என்னைப் பார்!!! நான் என்ன செய்தேன் உனக்கு கேடு? ஆயிரம் கண்ணுடையாள் என்று அர்ச்சிக்கிறார்களே உன்னை, அதில் ஒரு கண்ணால் பார்க்கக் கூடாதா இந்த ஏழை படும் அவதியை. உன்னை பக்தியோடு பூஜித்தால் பலன் உண்டு என்று சொன்னார்களே. நான் பூஜித்து கண்ட பலன் என்ன? எவன் என் குடும்பத்தை கெடுத்தானோ அவனை ரக்ஷித்தாய் நீ, என் கால் வலிக்க உன் கோயிலைச் சுற்றினேன். என் வாய் வலிக்க உன் நாமத்தை பூஜித்தேன். மாதாவே, மாகாளி, மகேஸ்வரி, லோகநாயகி என்று உன்னை பக்தியோடு வேண்டினேன், வாழ வகையின்றி திகைத்தேன். கடன் பட்டேன், கல்லுடைத்தேன், மூட்டை சுமந்தேன், வண்டி இழுத்தேன். நான் பாடுபட்ட பணத்தை என் சுக வாழ்விற்கா செலவிட்டேன்? இல்லை! சூடம் வாங்கினேன், மாலையிட்டேன், மாகாளிக்கு படையல் படைத்தேன். என் பக்தியில் என்ன தவறு கண்டாய் சொல்? சகலருக்கும் நீ தாய்தானே, ஏன் உனக்கு இந்த ஓர வஞ்சனை? என்னைப் போன்ற ஏழைகளை ஏன் இப்படி துடிக்கச் செய்கிறாய்? ஏன் பலகோடி மக்களை பதைபதைக்கச் செய்து சிலரை மட்டு சீராக்கி வைக்கிறாய்? கள்ளங்கபடமற்றவர்களை அனலில் புழுபோல் துடிக்க வைத்து சூது, வஞ்சனை, சதி செய்யும் சண்டாளர்களை ஏன் விட்டு வைக்கிறாய்? (கால் தடுமாற்றம்)
212