காட்சி 37
இருப்போர்:—வேதாசல முதலியார், முருகேசன்.
வே: கோவம் வருதே பிரமாதமாய். இந்த கோவத்தை உன் வீட்டிலே காட்டி உன் பெண்ணை அடக்க ஒடுக்கமா வச்சிருந்தா இந்த தீம்பு வருமா என் தலைக்கு? ஒரே பொண்ணுன்னு செல்லங் கொடுத்தே. நானும் ஒரே மகன்னு பார்த்தேன். இப்போ மானம் போகுது.
முருகேசு: ஏங்க, என் மகளா தப்பு தண்டவா செய்தது. பத்தரை மாத்து தங்கமாச்சிங்களே அது. ஏங்க ஏழை மேலே அபாண்டமா பழி சொல்றீங்க. விலையாகிற பண்டங்க அது.
வே: நல்ல விலைக்கு வித்துப் பூட்டேன்னுதான் நானும் சொல்லுறேன். அந்த தடிக்கழுதை மூர்த்தி வீடு வாணம், வாசலும் வாணாம், அந்த பொண்ணுதான் வேணும்னு போயிட்டான், அவ்வளவு தூரம் ஏறிப்போயிடுச்சி. உன் மக போட்ட சொக்குப் பொடி.
முரு: என்னாங்க! சின்ன எசமானா? உங்க மகனா?
வே: எனக்கு ஏண்டா அவன் மகனாகிறான்? உன் மருமகன்டா அவன்.
முரு: நல்லாயிருக்குங்க சேதி! என்ன தைரியங்க சின்ன எசமானுக்கு?
வே: அவன் கிடக்கிறாண்டா மடையன். உன்மகளுக்கெங்கடா அறிவு போச்சு; உன் மக சம்மதிச்சாளாமே அதுக்குச் சொல்லு. எங்கிருந்து வந்தது அந்த நெஞ்சழுத்தம். எங்க வீட்டு சோறுடா எங்க வீட்டு சோறு. தின்று கொழுத்துப் போயி என் மகனை வேற கையைப் பிடிச்சு இழுக்க வந்துட்டா.
முரூ: எசமான் வார்த்தையை அளந்து பேசுங்க. நாங்க தலைமுறை தலைமுறையா வாழ்ந்த மானமே போகுது. இப்பவே போறேன். ஒரே வெட்டா வெட்டிப் போட்டுட்டு வர்றேன்.
வே: யாரைடா?
முரு: என் குலத்தைக் கெடுக்க வந்த குட்டிச் சாத்தானை!
243