கம: இவ, என் ஸ்நேகிதி, சமூக சேவகி சாருபாலான்னு......
ரங்: தெரியாதுங்களே......சினிமா சினிமா பாக்கற பழக்கம் கிடையாது.....
கம: என்ன முதலியாரவாள்! அவசரப்பட்டுப் பேசலாமா...சாரூபாலா, யார் தெரியுமோ...இன்கம்டாக்ஸ் ஆபீசர் கோதண்டராம ஐயரோட பொண்ணு......
ரங்: அப்படிங்களா......மன்னிச்சுடுங்க......
சாரு: பரவாயில்லடி கமலா! என் டிரசைப் பார்த்து, சினிமா ஸ்டார்னு எண்ணிண்ட்டார்போல இருக்கு.....
ரங்: ஆமாங்க....இல்லிங்க....தப்பு தாங்க.....தோப்பனாரு சௌக்யந்தானுங்களே....இந்த ஊரிலே ரொம்ப நல்ல பேருங்க உங்க அப்பாவுக்கு......
சாரு: இங்கே என்ன! எந்த ஊரிலே அவர் வேலை பார்த்தாலும் அப்படித்தான்.......
ரங்: நெருப்புங்க, தப்புதண்டா செய்கிறவங்களைக் கண்டா....ஆமா.....சில பேர்களுக்கு, அவர் பேரேச் சொன்னாலே, சிம்ம சொப்பனந்தான்......
கம: அப்படித்தான் இருப்பார். ஆனா அவரோட மனசு தங்கம்......அது பழகினாத் தெரியும்......இப்ப, நம்ம சாரு, ஒரு காரியம் ஆரம்பிச்சிருக்கா, சம்பூர்ண ராமாயண காலட்சேபம் நடத்த ஏற்பாடு செய்திருக்கா.......
ரங்: ரொம்ப சந்தோஷம்ங்க.....எந்த இடத்திலே, எப்போ, என்னாலே ஆகவேண்டிய காரியம் என்ன, சொல்லுங்க, சங்கோசப்படாம......
கம: சத் காரியத்துக்குச் சங்கோசப் படுவாளோ! பாருங்கோ, இதிலே நான், என் தோப்பனாருக்கே விரோதமாக் கிளம்பிட்டேன். சாரூபாலா சொன்னா இந்தக் காலட்சேபம் சிலாக்கியமானதா இருக்கவேணும்னா, சித்ரகூட பாகவதர்தான் வரணும்னு எங்க தோப்பனார், இதுக்கு முன்னாலேயே, அவரை இங்கே வர வழைக்க ஏற்பாடு செய்துவிட்டாராம்; பார்த்தேன், சரி அவர் தருகிறதைவிட ஒரு ஐநூறு அதிகம் நாங்க தர்ரோம்னு தந்தி கொடுத்து அவரோட சம்மதத்தை வாங்கியாச்சி....அப்பாவுக்கு முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்கறது.....
293