ரங்: ரொம்ப சாமர்த்தியமாத்தான் வேலை செய்திருக்கறிங்க...ஆமாம், ஐயாவுக்கு அதாவது நம்ம இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு ராமாயணம் ரொம்ப பிடிக்கும்ங்களா.....
கம: சொல்லேண்டி சாரூ! இவ தோப்பனாருக்கு, உயிர், ராமாயணம்னு சொன்னா....வனவாசம் போகிற கட்டத்திலே, கண்ணீர் தாரை தாரையாப் பொழியும்.....
ரங்: எனக்குக் கூடங்க, அந்தக் கட்டத்திலே, கைகேயி மேலே வர்ர கோபம், இவ்வளவு அவ்வளவுன்னு சொல்லி முடியாதுங்க.....ஆபீசரய்யா அடிக்கடி காலட்சேபம் கேட்க வருவாருன்னு சொல்லுங்க......
கம: வருவாராவா! நீங்க ஒரு பைத்தியம் முதலியாரவாள்! ஆரம்ப விழா வைபவமே, அவர்தான் செய்துவைக்கப் போறார்...
ரங்: பேஷாப் போச்சு போங்க.....
கம: சீதா கலியாணத்துக்கு யார் வர்ரா சொல்லுங்க பார்ப்போம்......
ரங்: யாருங்க......?
கம: நம்ம ராஜாஜீ!
ரங்: ஆஹாஹா! சிலாக்கியமான ஏற்பாடு! ராமா! ராமா! உன் பெருமையே பெருமை.
கம: பட்டாபிஷேகத்துக்குத்தான் நாங்க போட்டிருக்கிற பிளான் பலிக்குமோ பலிக்கதோன்னு தெரியல்லே.....உம்மோட சொல்றதிலே என்ன தப்பு, நம்ம கவர்னர் இருக்காரே......
ரங்: நம்ம கவர்னருங்களா, என்னங்க அவருக்கு.....
கம: அடடா! அவருக்கு ஒண்ணுமில்லே முதலியாரவாள்! அவரைத்தான் பட்டாபிஷேகத்துக்கு அழைக்கிறோம்.....
ரங்: அடா அடா! இதைச் செய்துட்டாப் போதுங்க, நம்ம ஊரே பூரிச்சிப்போகும்....
கம: செலவுதான் நிறைய ஆகும்.....பாருங்க, கன்னைய்யா செட்டியாரிடம் கதை கதையா இதைச் சொன்னோம், அந்தக் கர்மி நூறு ரூபா கொடுத்துவிட்டு, இன்னும் தொந்தரவு கொடுக்காதிங்கன்னு சொல்லிவிட்டான்.