உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவனே அரனடியான்—இதோ உன்னைப் போன்றே காணப்படும் உருவம், உன் எதிரே நிற்கும் உருவம், உன் உள்ளத்திலே இருந்துவந்த அஞ்ஞானம்! அந்த அஞ்ஞான சொரூபத்தை நான் வெளியேற்றிவிட்டேன். ஆனால், நான் மறைந்ததும், அஞ்ஞான சொரூபம் மிரட்டும்—அஞ்ஞாதே! தங்க இடம் கேட்கும்—இசையாதே! விரட்டு—விரட்டு—உன் அடியார்களிடம் கூறிடு—அழித்துவிடு. அஞ்ஞான சொரூபத்தை மீண்டும் உன் உள்ளத்திலே குடிபுகவிட்டால்! பிறகு நான் வாரேன் உன்னைக் காப்பாற்ற (சொந்தக் குரலில்) என்று கூறிவிட்டு, அஞ்ஞானத்தை விரட்டினார்— அது அகோரக் கூச்சலிட்டுவிட்டு ஓடிவிட்டது—நான் தான் தன்யனானேன்! தயாபரனின் தொண்டனானேன்! மக்களின் தோழனானேன்! உண்மைக்கு ஊழியனானேன்! ஊராருக்கு உழைப்பாளியானேன்!.....ஆனால் மெய்யன்பர்களே! மீண்டும் அந்த அஞ்ஞான சொரூபம் வருமோ—வந்தால் என்ன செய்வது என்று அச்சம் எனக்கு. அரன் விட்ட வழிப்படி நடக்கட்டும்.


[கூட்டத்திலே பரபரப்பு—அமளி. உண்மை மடாதிபதி ஓடிவருகிறார்—அலங்கோலமாக, ஒரு பணியாளுடன்—கூவியபடி]

[உண்மை மடாதிபதியைத் தொலைவிலே கண்டதும், போலி மடாதிபதி]

போ. மடா: மெய்யன்பர்களே!.....அதோ.....அதோ.....

[என்று அச்சம்மேலிட்டு அலறும் பாவனையில் கூவ, பக்தர்கள் திடுக்கிடுகிறார்கள், மற்றோர் மடாதிபதியின் திடீர்ப்பிரவேசம் கண்டு.]

உ. மடா: (ஆத்திரமாகி) யார்டா அவன்—அயோக்கியா! அக்ரமக்காரா! வேஷக்காரா! நான் வசந்தமண்டபத்திலே இருந்த சமயம் இங்கே புகுந்து என் பீடத்தில் அமர்ந்துகொண்டு பிதற்றுகிறாய்......பேயர்களே! எப்படி இதை அனுமதித்தீர்கள்! பித்தர்களே! இதென்ன பாதகம்!

[இரு மடாதிபதிகளைக் கண்ட மக்கள் திகைத்து]

மக்: இங்கேயும் மடாதிபதி—அங்கேயும் மடாதிபதி—என்ன அதிசயம்....

போ. மடா: மெய்யன்பர்களே! வந்துவிட்டது அஞ்ஞான சொருபம்.....

[மக்கள் திடுக்கிடுகிறார்கள்]

310