உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 1.

இடம்:—சீமானின் மாளிகை மாடி அறை

நிலைமை:—அறைக்கதவு மூடப்பட்டிருக்கிறது; தாளிடப்படவில்லை, ஏதோ சினிமாப் பாடலொலி வெளியே உலவுகிறது. இடையே 'சீட்டி' அடிக்கும் சத்தமும் கேட்கிறது. அறையின் வெளிப் பக்கம் உட்கார்ந்து கொண்டு ஒரு வேலையாள் பூட்சுகளுக்குப் 'பாலிஷ்' போட்டுக் கொண்டிருக்கிறான். 'பூட்ஸ்' வாலிபர்களுக்கேற்ற நவநாகரீகமானதாகவும் ஏற்கனவே மெருகுள்ளதாகவும் இருக்கிறது.


அறைக் கதவைப் பாதி அளவு திறந்துகொண்டு வெளியே எட்டிப் பார்க்கிறான், ஒரு இளைஞன். இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று வயதிருக்கலாம் என்று எண்ணத்தக்க தோற்றம். பொலிவுள்ள முகம்; வாழ்க்கைச் சுவையைப் பருகிடுபவன் என்பதை விளக்கிடும் பார்வை.

இளைஞன்: (வேலையாளைப் பார்த்து அகம்பாவமற்ற, ஆனால் மேல் நிலையில் உள்ளவன் என்பதை நினைவுபடுத்தும் விதமான குரலில்) டே! இடியட்! வேலை முடிந்ததா......

வேலையாள்: (பழக்கப்பட்டுப் போயுள்ள பணிவுடன்) ஆமாங்க......

இ: (சிகரட் பற்றவைத்துக்கொண்டே) நல்லா துடைச்சியா

வே: ஆமாங்க......

இ: எதை?

வே: பூட்சை......

இ: மடயா! முதலிலே உன் அழுக்குக் கையைத் துடைத்துக்கிட்டயா.....

வே: (இளைஞன் வேடிக்கையாகப் பேசுவதை உணர்ந்து ஒரு அசட்டுச் சிரிப்புடன்) ஓ! கைகளைச் சுத்தமாக்கிக்கிட்டு, பிறகுதாங்க இந்த வேலைக்கு வந்தேன்.

318