உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
[இளைஞன் புன்னகை காட்டிவிட்டு, அறைக்கு உள்ளே செல்கிறான்; கதவை மூடிக்கொண்டு. அறைக் கதவு சரியாக மூடப்படாததால், உள்ளே இளைஞன், மேனாட்டு உடை அணிந்து கொள்வதும் நிலக்கண்ணாடி முன்பு நின்று சரிசெய்து கொள்வதும், வேலையாளுக்குத் தெரிகிறது. பலமுறை கண்டிருப்பதாலும், அந்தஸ்த்துக்கு ஏற்ற அலங்காரம் இருக்கும், இருக்கவேண்டியதுதான் என்ற இயல்புள்ளவன் என்பதாலும், வேலையாளின் பார்வையில் வெறுப்போ, அலட்சியமோ தென்படவில்லை. 'கண்ணாயிரம்! கண்ணு!' என்று கூப்பிட்டுக் கொண்டே, நடுத்தர வயதைக் கடந்து மூதாட்டி என்ற கட்டம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தோற்றமுள்ள மாது அறைய நோக்கி வரக் காண்கிறான். ஓரளவு மூடப்பட்டிருக்கும் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு மாது உள்ளே நுழைந்தபடி.]

மாது: கண்ணாயிரம்! டே! கண்ணு!

[இளைஞன், அவசர அவசரமாக, வாயில் இருந்த சிகரட்டை ஒருபுறம் வீசிவிட்டு வெளியே வருகிறான். வேலையாள், 'பாலிஷ்' போட்ட 'பூட்சை' காலருகே கொண்டு செல்கிறான் அதைக்கண்டு......]

புறப்பட்டாச்சா......வீடு வந்து அரைமணி நேரம்கூட ஆகல்லே மறுபடியும் வெளியே! ஏண்டா கண்ணாயிரம்! உனக்கு எதுக்காகடப்பா இந்த வீண் அலைச்சல். வீடு இருக்கு அரமனைபோல; தோட்டமிருக்கு நந்தவனம் போல; சொத்து இருக்கு சுகம்தர; நிம்மதியா வீட்டிலே இருக்கக்கூடாதா......

[கண்ணாயிரம் 'பூட்சு' போட்டுக்கொண்டே.]

க: நாம, நம்ம நிம்மதியை மட்டும் கவனித்துக்கொண்டா போதுமா....ஊருக்கு உபகாரம் செய்ய உழைக்கறதுதான் உத்தமர்கள் கடமைன்னு நீயே சொல்லி இருக்கறியே அத்தே! இப்ப நான் என்ன, உல்லாசத்துக்காகவா ஊர்சுத்தப் போறேன்......

மாது: என்ன வேலையோ, என்ன கடமையோ! பலபேர் என்னைக் கேட்கறாங்க. ஏன் அன்னபூரணி கண்ணாயிரம் இப்படி அலையறதுன்னு. ஒவ்வொரு நாளுமா வேலை இருக்கும் உனக்கு...

க: இன்னும் ஒரு பத்துநாள், இப்படி அப்படித் திரும்பக் கூட நேரம் கிடையாது நடனவிழா ஏற்பாடு. விழா எதுக்காக? ஏழைப் பிள்ளைகளைப் படிக்கவைக்க.....

319