சி: போறாத வேளைதான்...ஐயா! பர்மிட் இப்படித் தாறுமாறா கைமாறுவது தவறுன்னு சட்டம் சொல்லுது, தெரியுதா.....உன் விஷயமாகத்தான் மோப்பம் பிடிக்கறாங்கன்னு எனக்குத் தெரியாது, நேத்துத்தான் பெரிய அதிகாரி ஒருத்தர் வந்து தகவல் கேட்டாரு இதுவிஷயமா.....நான் சத்தார் சாயபுவிடம் பர்மிட்டு இருக்குது, ஆனா வியாபாரம் செய்யப் போதுமான பணம் இல்லே, யாருக்காவது விற்றுவிடுவான்னு சொன்னேன். முன் கூட்டி என்னிடம் ஒருபேச்சு, இப்படி ஒரு பர்மிட்டு இருக்குது வாங்கட்டுமான்னு கேட்டிருந்தா நான் அதிகாரிக்கு வேறே போக்குக் காட்டி இருப்பேன். நான் என்னத்தைக் கண்டேன், தெரிந்ததை, உண்மையைச் சொல்லிவிட்டேன். அவரு அப்பவே தந்தி கொடுத்துட்டாரே டில்லிக்கு. பர்மிட்டு பறிமுதலாயிடுமே...
வ: (பதறி) பாதிப் பணம் அட்வான்சு கொடுத்து விட்டனே......
சி: பணம் கிடக்கட்டும்....ஏதாவது ரசீது, ஒப்பந்தம் இதிலே கை எழுத்து உண்டா?
வ: இல்லிங்க...
சி: தப்பிச்சிகிட்டே போ! பணம் போனா போகுதய்யா, கம்பி எண்ணாம இருந்தாப் போதும்...இப்பவே, சத்தாருகிட்டச் சொல்லிவிடு நமக்கு வேண்டாம்யா பர்மிட்டுன்னு...
வ: ஆகட்டுங்க.......பர்மிட்டுக்காக நான் முயற்சி செய்தது குற்றமில்லிங்களே...
சி: மூச்சு விடாதேய்யா யாரிடமும்.........அய்யோவ்! ஒரு வேலை செய்...அந்த அதிகாரி ஊரை விட்டுப் போறவரைக்கும், நீ இங்கே இல்லாமலிருந்தா நல்லது. ஏன்னா, ஏதாவது அவன் கேட்டு, நீ எதையாவது உளறி வைத்தா, ஆபத்தாயிடும். பேசாம ஒரு நாலு நாளைக்கு வெளியூர் போய் இரு...
வ: காரைக்காலிலே சொந்தக்காரர் வீட்டிலே கலியாணம் அங்கு போய்...
சி: நல்ல யோசனை, புறப்படு புறப்படு...
டேய்! ஓடிப்போயி, சத்தார் சாயபுவை கையோட அழைச்சிக்கிட்டு வா! அவசரம், முக்கியம்னு சொல்லு...
325