பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


தமிழ் பேச்சுலகில் விடிவெள்ளியாகத் திகழ்ந்தது மட்டுமன்றி, அனைத்து வகையினரையும் ஈர்க்கும் வகையில் பேசிய ஒரே பேச்சாளர் பேரறிஞர் அண்ணா. கவின்மிகு கருத்துச் செறிவும் ஒன்றையொன்று விஞ்சும் பல வகை நயங்களும் கொண்டவை அவர்தம் பேச்சுகள். அவை தொகைவகை செய்து வெளியிடப் பெறச் சீரிய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள், திறனாய்வாளர்கள், வாசகர்கள் ஆகிய மூவகையினருக்கும் பயன்படும் வகையில் அவை வெளியிடப்பெறும்.

இத்த்திட்டத்தில் அண்ணாவின் பட்டமளிப்புபவிழா உரைகள் என்னும் தலைப்பில் முதல் நூல் இப்பொழுது வெளியிடப் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து பல நூல்கள் வெளிவரும்.

அண்ணா ஆற்றிய பட்டமளிப்பு விழா உரைகள் மூன்று. அவற்றில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உரை ஆங்கிலத்தில் ஆற்றப்பெற்றது. அப்பேருரை அண்ணாவின் நடையிலேயே மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளது. மேலும், சென்னைச் சமூகப் பணிப்பள்ளியிலும் மதுரைப் பல்கலைக் கழகத்திலும் அண்ணா ஆற்றியவை தமிழ் உரைகளே. இந்நூல் இம்மூன்று உரைகளோடு நிறைவுபெறுகிறது. இத்தமிழ் வெளியீட்டுத் திட்டம் வெற்றிபெற, அண்ணாவின் அன்பர்களும் வாசகர்களும் தங்கள் நல்லாதரவினை நல்கப் பணிவுடன் வேண்டுகின்றேன்.

அண்ணாவின் அறிக்கைகள் நான்கு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டிருப்பது இந்நூலுக்குரிய தனிச் சிறப்பாகும்.

"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது"

சூளைமேடு, சென்னை - 94.

பேரா. அ.கி. மூர்த்தி