பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அண்ணாவின் பேச்சின்
- ஓர் ஆய்வு


1. பொருள்

இந்நூலின் கண் உள்ள மூன்று உரைகளும் மன்பதை போற்றும் பேச்சுக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். முதல் உரையினைத் தவிர, ஏனைய இரண்டும் தயாரிக்கப்பட்டவையே. இவற்றில் தமக்கே உரித்தான முறையில் அண்ணா பல பொருள்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றார்.

எங்கிருந்தாலும் ஆற்றுக சமூகப் பணி என்னும் முதல் உரையில் முழு ஈடுபாடுள்ள சமூகத்தொண்டன் என்னும் வகையில் சமூக முன்னேற்றத்திற்குச் சமூகப்பணி இன்றியமையாதது என்பதை அண்ணா வலிவாக வற்புறுத்திச் சமுதாயச் சீர்த்திருத்தம் சமூகச் சேவையிலிருந்து குறிப்பிடத்தகுந்த வகையில் வேறுபட்டது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். பட்டம் பெறுவோரை எங்கிருந்தாலும் உண்மைச் சமூகத் தொண்டு ஆற்றவேண்டும் என்றும் அவர் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்.

பல்கலைக்கழகம் பறைசாற்ற வேண்டியவை என்னும் இரண்டாம் உரையிலும், பல்கலைக்கழகத்தின் தலையாய பணி என்னும் மூன்றாம் உரையிலும் தமிழர்களின் புகழ்மிகு பழங்கால வரலாற்றினை நெஞ்சு நெக்குருக அவர் பேசுகின்றார். இலக்கியத்துறையில் நம் செயல்கள் அரியவை எனவும் புகழ்கின்றார். அடுத்துத் தமிழ் இலக்கியங்களின் உலகளாவிய செய்தியினை அவையோருக்கு அவர் அறிவிக்கின்றார்.

நாடு விடுதலை பெறுவதற்குமுன், கருத்து உரிமையிலும் வெளியீட்டிலும் நம்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலிருந்து வேறுபட்டதை அவர் முனைப்பாகச் சுட்டிக் காட்டுகின்றார். பொதுவாகப் பல்கலைக்கழகங்களின் பணிபற்றியும் சிறப்பாக அண்ணாமலை, மதுரைப் பல்கலைக்கழகங்களின் பணி பற்றியும் அண்ணா குறிப்பிடுகின்றார். முதற்கண் கருத்துரிமை பல்கலைக்கழகங்களின் தனி உரிமையாகும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழகங்கள் அறிவுக் கருவூலங்கள் என்றும், எண்ணம், அறிவு, தொண்டு ஆகியவற்றைப் பரப்பும் திருத்-