பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI


தூதரகங்கள் என்றும் அவர் குறிப்பிடுவது கருத்திற் கொள்ளத்தக்கது.

அண்ணா கருத்திற்கேற்பப் பல்கலைக்கழகக் கல்வி என்பது பல்வேறு நாடுகளும் பேணிப் போற்றும் சிறந்த எண்ணங்களின் பொழிவேயாகும். அறிவு நோக்கு பணிநோக்கு, பொருள் தேடும் நோக்கு என்பன பல்கலைக்கழகங்களின் மூவகை நோக்குகளாகும். இவற்றில் பணி நோக்கினையே அண்ணா பெரிதும் போற்றுகின்றார். ஏனெனில், நாட்டுத் தொண்டிற்காகத் தம் வாழ்வையே ஒப்படைத்த பெருந்தகை அவர்.

நடுநிலையுள்ளம், சிறப்புள்ளவற்றையும் சிறப்பில்லாதவற்றையும் வேறுபடுத்தி அறியுந்திறம், அச்சமோ அயர்வோ இன்றி, ஒரு சிக்கலை அதன் எல்லாக் கோணங்களிலும் பார்க்குந்திறன், மற்றவர் கருத்தை மருட்சியில்லாமல் ஏற்கும் மனப்பாங்கு ஆகியவை பல்கலைக்கழகங்களின் மாற்ற இயலா அடிப்படை இயல்புகளாகும் என்பதும் அவர்தம் துணிபு. தவிரப் பல்கலைக்கழகங்களின் தலையாய பணி அறிவாற்றலைப் பெற விரும்புவோருக்கு அதனை அதன் உண்மையான அளவிலும் நோக்கிலும் அளிப்பதும் உலகின் குறிக்கோள்கள் கருத்துகள் ஆகியவற்றின் தனியாண்மையைக் காப்பதுமாகும்.

இன்று நம்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தலையாய பணி பெரிதும் புறக்கணிக்கப்பட்ட பாமரனைக் கணக்கில் கொண்டு, அவனை மக்களாட்சிக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதேயாகும். அண்ணாமலை, மதுரைப் பல்கலைக்கழகங்களுக்கு இதனைத் தவிரத் தனிப்பணி ஒன்றும் உண்டு. தமிழின் வீரவரலாறு, இலக்கிய அருஞ்செயல்கள் ஆகியவற்றை உலகுக்கு அறிவிப்பதும், தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும் உலகில் உரிய இடத்தைப் பெறச் செய்வது அத்தனிப் பணியாகும்.

அஞ்சாமை, உண்மை, விரிந்த மனப்பான்மை, மரியாதை, பொறுமை முதலிய நற்பண்புகளைப் பேணிக்காக்குமாறு பட்டம் பெறும் மாணவர்களை அண்ணா வேண்டுகின்றார். அறிவுப் புரட்சியிலும், சமூகச் சீர்திருத்தத்திலும் தளர்வின்றி ஈடுபட்டு, நாட்டை வளப்படுத்த வேண்டுமென்றும் அவர்களை அண்ணா வேண்டுகிறார்.

மாணவர்களின் ஒழுங்கின்மை, பயிற்று மொழி,