பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. அண்ணா - இராஜாஜி வேண்டுகோள் காங்கிரஸ் அல்லாத அரசுகளைக் கவிழ்த்துவிட இந்தியப் பேரரசை நடத்துங் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வேலை செய்து பல இடங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சியைப் புகுத்திவிட்டது. தமிழகத்தில் அமைத்துள்ள அரசையும் எப்படியும் கவிழ்த்து விடலாம். இங்குக் குடியரசுத்தலைவர் ஆட்சியைப் புகுத்தி விடவும் அவர்கள் விரும்புகிறார்கள் தமிழகத்தில் இப்பொழுதுள்ள அரசு கவிழ்க்கப்பட்டுக் குடியரசுத்தலைவரின் ஆட்சி புகுத்தப்படுமானால், இந்தி ஆதிக்க எதிர்ப்பு அரசு கலைக்கப்பட்டு, இந்தி ஆதரவு அரசு அமைக்கப்பட்டுவிடும். இந்த நிலையை இந்தி ஆதிக்கத்தைப் புகுத்தத் திட்டமிட்டோர் விரும்புகிறார்கள். இந்த நிலையை உண்டாக்க, அவர்களிடம் என்னென்ன கிளர்ச்சிகளை மூட்டிவிடலாம் என ஆவலுடன் தேடுகின்றனர். "தமிழக அரசு சட்டம் சமாதானம் கெட்டுப் போகத் துணை செய்கிறது" என்றும் "வன்முறைகளை வளர்த்துவிடுகிறது" என்றும் "நாட்டைத் துண்டாடத் தூபமிடுகிறது" என்றும் பழி சுமத்தி இதனைக் காரணமாகக் காட்டித் தமிழகத்து திமுக அரசைக் கவிழ்த்துவிட விரும்புகிறார்கள். மொழிப் பிரச்சினையில் உணர்ச்சி கொண்டுள்ள மாணவர் களால் கோவையிலும் மற்றும் சில இடங்களிலும் உள்ள பகுதியினர் தேசியக் கொடியை எரிப்பது, தனித்தமிழ்நாடு தீர்மானம் போடுவது, தனித்தமிழ் நாட்டுக் கொடி ஏற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இந்தச் செயல்களைத் தொடரும்படித் தூண்டிவிட்டு இதையே காரணமாகக் காட்டித் தமிழக அரசைக் கவிழ்க்கத் திட்டம் போட்டு இருப்பதாகக் தெரிகிறது. நாட்டுப் பிரிவினைக்கா நாம் இந்தி எதிர்ப்பு நடத்தவில்லை. இந்தியைப் புகுத்தக் கூடாது என்று நாம் கூறும்போது நாடு பிளவுபடக் கூடாது என்பதுடன் சேர்த்தே கூறுகிறோம். இதனை அறிந்தும் மாணவர்களில் ஒரு பகுதியினர் எந்தப் பழிசுமத்தித் தமிழக அரசைக் கவிழ்க்கலாம்' என்று இந்திய ஆதிக்கத்தினர் திட்டமிடுகின்றார்களோ, அந்தத் திட்டத்துக்குத் தங்களையும் அறியாமல் துணை செய்வதை உணர வேண்டுகிறோம்.